குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஜயன்குளம் கமக்கார அமைபின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஓப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தலைவரே பெறுப்பேற்று மேற்கொண்டிருந்தார். இந்தப் பணிகள் மார்ச் மாதம் நிறைவுக்கு வந்திருந்தது. ஆனால் இவ்வருட காலபோக பயிர்செய்கைக்கு குறித்த கட்டுமானப் பணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் தற்போது அவை உடைந்தும் வெடித்தும் காணப்படுகிறது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளில் உரிய முறைப்படி கம்பிகள் வைக்கப்படாதும், சீமெந்து கலவைகள் உரிய தரத்தில் பயன்படுத்தாதும் ஒப்பந்த காரரால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்து விட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கமல சேவைகள் உதவி ஆணையாளர் ஆயகுலன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது
மேற்படி மலையாளபுரம் கமக்கார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கட்டுமானப்பணிகள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு திணைக்கள தொழிநுட்ப பிரிவுக்கு தான் அறிவித்திருப்பதாக தெரிவித்த அவர் குறித்த கமக்கார அமைப்பு தொடர்பில் இதற்கு முன்னரும் பல ஊழல் குற்றசாட்டுகள் தங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றும் அது தொடர்பிலும் நீதி மன்ற நடவடிக்கைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்