இந்தியா சினிமா பிரதான செய்திகள்

விநாயகரை விமர்சித்தமை – இயக்குனர் பாரதிராஜாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

இயக்குனர் பாரதிராஜா விநாயகரை விமர்சித்தமை தொடர்பான வழக்கில்   நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமை காரணமாக அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து நாராயணன் என்பவர் வடபழனி காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த மே 23ஆம் திகதி நிபந்தனை அடிப்படையில் முன் பிணை வழங்கியது.

மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து பிணையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் பிணை உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் பாரதிராஜா தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன் வழக்கை நீதிபதி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.