இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் மழைக்கால கூட்டத் தொடரில் குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள நிலையில் இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் பலாத்கார வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் முன்ஜாமீன் அளிக்கப்படாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.