கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள இன்னார்சூட் என்ற கிராமத்தினை பெரியதொரு பனிப்பாறை நெருங்கி வந்துள்ளதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பனிப்பாறை உடைந்துவிடும் சந்தர்ப்பத்தில் எழும் அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடலாம் என்ற அச்சம் காரணமாகவே மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்னார்சூட் கிராமத்தின் கடலை அண்மித்திருக்கும் மேடான நிலப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்தப் பனிப்பாறை காணப்படுவதாகவும் இதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இவ்வாறான மிக பெரிய பனிப்பாறைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் அடிக்கடி நிகழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த கோடை காலத்தில் கிரீன்லாந்தின் வட மேற்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் ஏற்பட்ட அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்து 4 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.