குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையர்களை இந்தியர் போன்று மாற்றி போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணின் பெயரில் போலி ஆதார் அட்டையும் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் சென்னையில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர்.
77 இந்திய கடவுச்சீட்டுக்கள், 12 இலங்கை கடவுச்சீடுக்கள், கடவுச்சீட்டை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 85 ஆயிரம் ரூபா பணம் ஆகியனவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் கைது செய்யப்பட்ட பயண முகவர் உட்பட 11 பேர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தகவல்களைப் பெற்று அதனை அடிப்படையாக கொண்டு இவ்வாறு போலி இந்திய கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.