காஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் அரசாங்கம் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை நோக்கு தாக்குதல் மேற்கொள்வதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கடந்த சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. எகிப்தின் சமரச திட்டத்தை ஏற்று இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இனி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில்தான் இந்த போர்நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.