குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் மூன்று மாதங்கள் தங்கியிருக்க முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல பசில் ராஜபக்ச அனுமதி கோரியிருந்தமைக்கமைய நீதிமன்றம் அவருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், அவர் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யான்துடுவ அனுமதி வழங்கியுள்ளார்.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 36 மில்லியன் ரூபாவுக்கும் மேலான பணத்த தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில், கடுவலை நீதவான் நீதிமன்றம், பசில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்திருந்தது.
வழக்கு விசாரணைகள் பசில் ராஜபக்ச இன்றி, அவர் சார்பிலான சட்டத்தரணி ஊடாக நடக்குமாயின், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வது எதிர்ப்பு எதனையும் வெளியிடப் போவதில்லை என சட்ட அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.