தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 பேரை கைதுசெய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி இருந்தனர். இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.
எனினும் பின்னர் பல காரணங்களை முன்வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தீர்மானித்திருந்தனர். அத்துடன் வடமாகாணத்தில் இந்த வழக்கு நடத்தப்பட்டால் அச்சுறுத்தல் காரணமாக சாட்சிகள் சாட்சிசொல்ல மறுப்பார்கள் என்ற காரணத்தை முன்வைத்து கொழும்பு மேல்நீதிமன்றில் இந்த வழக்கை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த வழக்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதில் தனக்கு உடன்பாடு கிடையாது என எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.