ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட இருப்பதால், 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட உள்ளது. தரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும், அணை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் கேரள அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.
இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்துவரும் தீவிரமான தென் மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில் இப்போது, 2,395 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பதால், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் சூழல் உள்ளது. இதனால், அணையை செருதோனி அணை மதகுகள் வழியாக திறக்கும் பணியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இடுக்கி அணையைத் திறப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன், தலைமையில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரிடர் மீட்பு அணிகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.
செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி என்பது குறிப்பிடத்தக்கது.