குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மாநகரத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களை குழப்பகின்ற வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாதென மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் உறுப்பினர் வி.மணிவண்ணண் தன்னுடைய அபிவிருத்தி வேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழப்புவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்தோடு தமது கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளையும் குழப்பகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த விடயங்களில் மாநகர முதல்வர் தமக்கு ஒரு தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதனால் சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நீண்டதொரு விவாதமே நடைபெற்றது.
இதன் போது இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இதனையடுத்து சபை உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகவே கருதவதாகவும் அனைவரதும் செயற்பாடுகளுக்கு தடையுறுகள் ஏற்படுத்தப்படமாட்டதென்றும் முதல்வர் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.
மேலும் சபையில் உள்ள 27 வட்டாரங்களிலும் உறுப்பினர்கள் ஒருமித்து செயற்பட்டு வருவதாகவும் ஆனால் இரண்டாம் வட்டாரத்தில் மாத்திரம் ஒரு குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதல்வர் அந்த விடயம் சம்மந்தமாக உரிய தரப்பினர்களை அழைத்து பேசி தான் ஒரு தீர்க்கமான முடிவொன்றை விரைவாக எடுப்பதாகவும் கூறினார்.
அதனூடாக உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை சீரான முறையில் அனைவரும் இணைந்ததாக மேற்கொள்ள முடியுமென தான் நம்புவதாகவும் ஆர்னோல்ட் மேலும் தெரிவித்தார்.