மூன்றாவதுசர்வதேச ஆய்வு மாநாட்டில் – ஆய்வமர்வும் கட்டுரைகளும்
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 15.07.2018 தொடக்கம் நான்கு நாட்கள் மிகவும் சிறப்புற நடைபெற்றது. இவ் ஆய்வு மாநாட்டிற்கு புலமையாளர்கள், ஆய்வாளர்கள் பலரும் வருகைதந்து ஆய்வமர்வுகளுக்குத் தலைமை தாங்கியதுடன் ஆய்வுக் கட்டுரைகளையும் முன்வைத்தனர். இம்மாநாட்டில் மூத்த பேராசிரியர்கள் முதல் இளம் ஆய்வாளர்கள் வரை அனைவரதும் பங்குபற்றல்களைக் காணமுடிந்தது. நூற்று அறுபத்து நான்கு பேர் ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்தமை சிறப்பிற்குரியது. இவ் ஆய்வு மாநாட்டில் ‘உணவுசார் வழக்காறுகளும் உள்ளுர் அறிவுச் செயற்பாடுகளும்’ என்ற பெருண்மையிலானஆய்வமர்வு பற்றியும் அதில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பான விடயப் பரப்புக்களையும் இக்கட்டுரையில் குறிப்பிட முனைகின்றேன். இது கட்டுரைகளின் தரம், தரமின்மை பற்றிய விமர்சனமாகவோ கருத்துரையாகவோ அமையாது கட்டுரைகளின் சாராம்சங்களையும் விடயப்பரப்புக்களையும் விபரிப்பதாக அமைகின்றது.
‘உணவுசார் வழக்காறுகளும் உள்ளுர் அறிவுச் செயற்பாடுகளும்’என்ற இவ்வமர்வுக்கு பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்வமர்வில் எட்டுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்ன. முதலாவதாக பெண்களின் உணவிடுதலின் பண்பாடும் தத்துவங்களும் என்ற தலைப்பில் திருமதி வாசுகி ஜெயசங்கர் அவர்களும் கிழக்கிலங்கையின் பாரம்பரியமாக இருந்துவரும் அரிசிமாப்பலகார வடிவங்களின் அழகியலும், அக்கலைஞர்களை இனங்காண்பதும் வலுப்படுத்தலும் என்ற தலைப்பில் திருமதி ரினுஜா சிவசங்கர் அவர்களும் பண்டைத் தமிழர் பாரம்பரிய நீராகரமாக தோப்பிக்கள் என்ற தலைப்பில் திருமதி வானதி பகீரதன் அவர்களும் மட்டக்களப்புத் தமிழர்களின் உணவுசார் வழக்காறுகளும் உள்ளுர் அறிவுச் செயற்பாடும் என்ற தலைப்பில் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் அவர்களும் யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலில் திரவ ஓதனப் (உணவு) பயன்பாடு : மரபும் மாற்றமும் என்ற தலைப்பில் சி.ரமணராஜா அவர்களும் உள்ளுர் உணவுக் கலாசாரமும் தத்துவங்களும் என்ற தலைப்பில் திருமதி வானதி பகீரதன், திருமதி. ஏம். ஏ. சி. பாத்திமா அறுசியா,செல்வி இரேசா மெஹந்தி வடுகெதர ஆகியோரும் Battle against the Killer Disease என்ற தலைப்பில் Dr K T Sundaresan அவர்களும் Benefits of Sri Lankan traditional agricultural and food practices given solution for Non- Communicable in SriLanka – An intervention by “Hela Suwaya” Organization என்ற தலைப்பில் K.S.Dahanayaka அவர்களும் தங்களது ஆய்வுகளை முன்வைத்தனர்.
‘பெண்களின் உணவிடுதலின் பண்பாடும் தத்துவங்களும்’; என்ற தலைப்பில் திருமதி வாசுகி ஜெயசங்கர் அவர்களின் கட்டுரை முதலாவதாக முன்வைக்கப்பட்டது அதில் பெண்கள் தம்; குழுமத்துக்கு உணவிடுதலானது நீண்ட நெடுங்காலமாக அவர்களின் பொறுப்பாக இருந்து வருகின்றது என்பதும் இது பசிக்கும் ருசிக்கும் உணவிடுதலாக மட்டுமின்றி நோய் வராது தடுத்தல், வந்தநோய்க்கு மாற்றாக உணவையே மருந்தாக்கல் போன்ற அறிவு திறனுடன் தொடர்புபட்டது என்பதும் இந்த அறிவும் திறனும் தாய்வழி–பெண்வழி அறிவு திறனாகத் தொடர்வது என்பதும் இது மழை – வெயில்-வெப்பம், பனி-குளிர் ,வௌ;வேறு காற்றுக் காலங்கள் என இயற்கையினது இயல்புகளுடனும் நியதிகளுடனும் தொடர்புபட்டது எனவும் ஒரு குறித்த நிலத்தில் குறித்த காலத்தில் விளையக் கூடிய,கிடைக்கக் கூடியஉணவுகள் அந்த நிலத்தில் தோன்றி வாழ்ந்தவர்களை அந்தந்தக் காலங்களில் வாழவைக்க கூடியன என்பதும் அனைத்து உயிரினங்களுக்கும் இடையேயான உணவுத் தொடர்பும் இவ்வாறானதே அதாவது ஒவ்வொரு உயிரினமும் நோய்களின்றி வாழ்ந்து இனம்பெருகி வாழ்வதற்கான ஏற்பாட்டை அந்தந்த இயற்கைச்சூழல் தெரிவுசெய்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
நமது பண்பாட்டில் ஒவ்வொரு தனி மனிதர்களினதும் உடற் தன்மைகள் – சூடு, குளிர், பித்தம், கபம், வாதம், கிரந்தி போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவற்றை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய உணவுகளுடனும், காலநிலைகளுடனும் சேர்த்தே புரிந்து வைத்திருக்கப்படுகின்றன என்பதும் எந்தக் காலத்துக்கு எந்த உணவு நல்லது? எந்தப் பொருளை எதனுடன் சேர்க்கலாம்? இதில் எது எதனுடன் சேர்தல் ஆகாது? யாருக்கு என்ன உடல்வாசி? அதற்கு எது ஒத்துப் போகும்? என்பன போன்ற பலவகையானபுரிதல்கள் அடங்கும் என்பதும் இந்தப் புரிதல்கள் எமதுதாய்மார் – பெண்வழிஉறவுகள் மூலம் வாய்மொழியாகவும் பார்த்துச் செய்தல் ஊடாகவும் சந்ததிகள் சந்ததியாகக் கடத்தப்பட்டும்,வளர்க்கப்பட்டும் வந்துள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டது.
இது ஆய்வு கூடங்களில் பிராணிகளிலும், பின்னர் மனிதர்களிலும் சில ஆண்டுகளுக்குப்; பரீட்சிக்கப்பட்டு விஞ்ஞானரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அறிவு அல்ல. என்பதும் எங்களது தாய்மாரால் அவரவரது குடும்பங்கள் நீடூழிவாழ வேண்டும் என்பதற்காக பலதலைமுறைகளாக அனுபவங்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டு வந்த அறிவு. இது நவீன மேலைத்தேய கல்விக் கோட்பாடுகளுக்கு புரியாதகாரணத்தால் அங்கீகரிக்கபடாததாகி எங்களாலேயே கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவு எனவும் விளக்கப்பட்டது.
இன்று உலகம் முழுவதும் உற்பத்தியாகுபவற்றை வாங்கி அவற்றை உலகம் முழுவதும் விற்பதையே மேம்பட்ட அபிவிருத்தி என்றும் (சந்தைப்பொருளாதாரம்), உலகின் அதி உச்சவியாபாரிகள் விற்கும் விடயங்களே உலகமக்களுக்கு நல்லனவென்றும் எமதுஅரசும் கல்வியும் ஊடகங்களும் சொல்ல வைக்கப்படுகின்றன எனவும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.
நாங்களும் காலனித்துவப்படுத்தப்பட்ட மூளைகளின் ஆழங்களில் கிடக்கும் எமதுபண்பாட்டின் உணவுத்தத்துவநினைவுகளிலிருந்துவிடுபடமுடியாதவர்களாகவும்,அதேநேரத்தில் பலவகையானஉணவுப் பொருட்களினதும் சமையல் முறைகளதும் அறிமுகங்களால் குழப்பப்பட்டஒருஉணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் நோயுற்றமனிதராய் உலவிக் கொண்டிருக்கின்றோம். அத்தகையபிரச்சசனைகளை இனங்காண்பதாகவும் அடையாளப்படுத்துவதாகவும் இக்கட்டுரைஅமைந்திருந்தது.
‘கிழக்கிலங்கையின் பாரம்பரியமாக இருந்து வரும் அரிசிமாப் பலகார வடிவங்களின் அழகியலும், அக் கலைஞர்களை இனங்;காண்பதும்; வலுப்படுத்தலும்’ என்ற தலைப்பிலான திருமதி ரினுஜா சிவசங்கர் அவர்களின் கட்டுரையில் அரிசிமாப்பலகாரங்களும் அதனைக் கொண்டு படைக்கப்படும் தோரணங்களும் ஒரு இனத்தின் இருப்பையும் பழைமையினையும் கலை நுணுக்கத்தையும் வெளி உலகுக்குக் காட்டுகின்ற ஒரு கலை வடிவமாக அமைகின்றது என்பதும் இவை தற்போது அருகி அழிந்து விடும் நிலையில் உள்ளது என்பதும் இதன் வடிவங்களின் அழகியலைப் பாதுகாக்கும் பொருட்டு அதனைப் படைக்கும் கலைஞர்களை கௌரவித்து ஊக்குவிப்பதும் அவசியமாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
கிழக்கிலங்கையின் பாரம்பரியமாக அரிசிமாப்பலகாரத் தோரணங்கள் ஆகமம் சார்ந்த ஆலயங்களை விட ஆகமம் சாராத பத்ததி வழிபாட்டு முறைகளைக்கொண்ட சிறுதெய்வ வழிபாட்டிடங்களை அலங்கரிப்பதற்கும் நிவேதிப்பதற்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது என்பதும் சிறு கொட்டில்களாகவும்குடிசைகளாகவும் பந்தல்களாகவும்இருந்த இந்த ஆலயங்கள் ஆகம விதிமுறைப்படியான ஆலயங்களாகவும் ஆசாரிய அபிடேக வழிபாடாகவும் மாற்றம் பெற்றுக்கொண்டு வருகின்றது என்பதும் அத்துடன் நவீன பொருட்களான பொலித்தீன் பிளாஸ்டிக் மூலப்பொருட்களினாலான அலங்காரத்தோரணங்கள் பயன்படுத்தப்படுகின்றமை பற்றியும் இதனால் அரிசிமாப்பலகார அலங்காரத்தோரணங்ளின் தேவை குறைவடைந்து வருகின்றது என்பதும் தமிழரின் தனித்துவமான பண்புகளை உள்ளடக்கிய இந்த அரிசிமாப்பலகாரங்களால் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை எனவும் மாறாகப் பல நன்மைகளே கிடைக்கின்றன என்பதும் மேலும் புதிது புதிதாகச் செய்வதால் புத்தாக்க அலங்காரமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது எனவும் விளக்கப்பட்டது.
இவை கிழக்கிலங்கையில் குறிப்பாக களுதாவளை செட்டிபாளையம் தேற்றாத்தீவு களுவாஞ்சிகுடி பெரிய போரதீவுக் காளி கோவில் தாந்தா முருகன் ஆலயம் பாண்டிருப்பு துரோபதை அம்மன் ஆலயம் சேனைக்குடியிருப்புக் காளி கோவில் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவில் போன்ற இடங்களில் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதும் மேலும் களுதாவளையில் உள்ள மக்களே வேண்டுதலுக்காக அதிகமாக இவ்வலங்காரத்தோரணங்களைச் செய்து கொடுக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டது.
பெரிய அளவிலும் தட்டைத் தன்மையிலும்; இப்பலகாரங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஈடுபடுகின்றவர்கள் கையாளுகின்ற ஒவ்வொரு அலங்காரங்களும் ஏதோ ஒருவகையில் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபட்ட விடயங்களிலிருந்து பெற்றுள்ளனர் ஏன்பதை கவனிக்கக்கூடியதாக உள்ளது. உடுக்கு, காற்சிலம்பு, வேப்பிலை, சூலம்,கைச்சிலம்பு, வாள், அம்மனின் முகம், தாலிக்கொடி முதலான அலங்காரங்களை கண்ணகை மாரி காளி முதலான அம்மன் ஆலயங்களுக்காகச் செய்யப்படும் பலகாரங்களில் மாத்திரம் கையாளுகின்றனர். புpள்ளையார்,சிவன்,விஸ்ணு, முருகன் ஆலயங்களில் சக்கரம், ஓம், வேல்,கொடி, பிள்ளையார் முகம் போன்ற அலங்காரங்களை விசேடமாக கையாளுகின்றனர். அவை தவிர பொதுவான அலங்காரங்களும் பயன்படுத்துகின்றனர். பழவகைகள் கொடிவகைகள்,மலர்கள், குறியீட்டு வகைகள், மங்கலப் பொருட்கள் முதலானவற்றை அனைத்து ஆலயங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் விபரிக்கப்பட்டது.
இவ் அலங்காரங்கள் விழா நடைபெறும் இடத்தை அழகுபடுத்தவும் தெய்வாதிகளின் உருவேறும் உணர்வை அதிகரிக்கச்செய்யவும் பக்தர்களின் பக்தியுணர்வை மேம்படுத்தவும் உதவுவதோடு உடல், உள ரீதியான நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இவற்றுடன் கமுகம்பாளை, வேப்பிலைஇ குருத்தோலை, வாழைப்பழம் முதலிய பொருட்கள் ஓர் ஒழுங்கமைப்பில் நிறம், உயரம் என்பவற்றை கருத்திலற் கொண்டு ஒத்திசைவான முறையில் காட்சிப்படுத்தப்படுவதாகவும் இக்கலைப்பணியில் ஈடுபடுவோர் பெறுகின்ற மன நிறைவு, ஆத்மதிருப்தி என்பவற்றின் பெறுமதி பொன்னிலும் மேலானது. மன ஒருமைப்பாட்டுடன் இறை உணர்வுடன் கூலி பெறாது சிரமத்தை தானமாகச் செலவிட்டு செய்யும் கூட்டு முயற்சியாகவும் இது அமைகிறது எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த அரிசிமாப் பலகார அலங்காரக் கலையானது பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அக் கலைகளில் ஈடுபடுவோரை ஆதரித்து அவர்களை ஊக்குவிப்பதினூடாக இக்கலை வடிவத்தினை பாதுகாக்க முடியும்எனவும் குறிப்பிடப்பட்டது.
திருமதி வானதி பகீரதனின் பண்டைத் தமிழர் பாரம்பரிய நீராகரமாக தோப்பிக்கள் என்ற கட்டுரை சங்கால மக்களின் வாழ்வியல், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களோடு இணைந்தாகவும் அவர்களது பிரதான நீராகமாகவும் கள் இருந்துள்ளது என்பதையும் பண்டைத்தமிழ் மக்கள் அருந்திய பான வகைகள் பற்றிய குறிப்பக்களில் கள் பற்றிய குறிப்புக்களே அதிகம் இடம்பெற்றுள்ளன என்பதும்
சங்ககால மக்கள் வெப்பகாலத்தில் தங்கள் நீர் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளவும் குளிர்காலத்தில் தம் உடற்சூட்டைப் பேணிக் கொள்ளவும், கடின செயற்பாடுகளின் போதும் உடல் உழைப்பின் போதும் ஏற்படும் உடல் வலிகளையும் உடற்களைப்பையும் போக்கிக் கொள்ளவும் கள்ளையே சக்தி தரும் முதன்மையான பானமாக் கருதினர் என்பதும் தற்காலத்தில் நாம் தேநீரை எவ்வாறு சக்தி தரும் பானமாகவும் விருந்தோம்பலுக்கான பானமாகவும் கொள்கின்றோமோ அதே போல சங்ககால மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவே இந் நீராகாரம் இருந்துள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது.
‘கள்’ என்பது களித்திருத்தல் என்ற சொல்லிலிருந்து வந்ததெனவும் சங்க இலக்கியங்களில் கள் என்பது மது, மட்டு, பதநீர், தேறல், பிழி, நறவு, அரியல், தோப்பி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன என்பதும் சங்க இலக்கியங்களில் தென்னை, பனை, அரிசி, தினை, தேன், பூக்கள் முதலானவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பல வகைக் கள் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன என்பதும் புளிப்புச் சுவையும் குளிர்ச்சியும் உடைய ஒரு பானமான இக் கள்ளை சங்ககால மக்கள் தமது வாழ்வியற் சூழலில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பருகியுள்ளமை பற்றியும் அரசர் முதல் பாணர் கூத்தர் புலவர் மகளிர் என மக்கள் அனைவரும் கள் அருந்தியமைக்கான சான்றுகள் உண்டென்பது நிரூபிக்கப்பட்டது.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கள் வகைகளில் தோப்பி என்பது தவிட்டு அரிசியும் நெல் முளையும் கொண்டு தயாரிக்கப்படும் கள்ளைக் குறிக்கின்றது என்பதும் இத் தோப்பி எனும் நீராகாரம் சங்ககால தமிழ் மக்களில் உணவுப் பழக்கவழக்கங்களுடன் எவ்வாறு இணைந்திருந்தது? என்பதையும் இது எத்தகைய சந்தர்ப்பங்களில் பருகப்பட்டது? என்பதையும் இத் தோப்பியை பருகியோர் யாவர்? என்பதையும் இப் பானத்ததைப் பருகுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் எவ்வாறு பேணப்பட்டது? என்பதும் சங்ககால மக்களின் வழிபாட்டு மரபுகளுடன் எவ்வாறு இணைந்திருந்தது? என்பதும் இது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பானமாக அமைந்திருந்தது? என்பதும் தெளிவுபடுத்தப்பட்டதோடு பண்டைத் தமிழரின் நீராகாரத்தை அறிமுகம் செய்வதாகவும் அமைந்திருந்தது.
பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் ஒன்று தோப்பிக்கள் தயாரிக்கும் முறையை விபரிக்கின்றது.
அவையா அரிசி அம் களித் துழவை
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி,
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ, தேம் பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி,
வல் வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர், அரியல் விரல் அலை, நறும்பிழி,
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்.
(பெரும்பாணாற்றுப்படை 275-281)
இவ்வடிகள் தவிடு நீக்காத அரிசிமாவில் தயாரிக்கப்பட்ட கூழை ஒரு தட்டிலே ஊற்றி ஆறவிட்டபின்னர் அதனை வலிய வாயையுடைய ஒரு மண் பானையில் ஊற்றி அதனுடன் முளை நெல்லை இடித்துக் கலந்து இரண்டு பகலும் இரண்டு இரவும் வைத்ததுப் பின்னர் வெந்நீரை ஊற்றி வடித்து பிழிந்து எடுக்கப்பட்டமை பற்றிக் கூறப்படுகிறது. இத்தகைய செயன்முறையில் தயாரிக்கப்படட்ட கள்ளை செய்து வந்து காட்சிப்படுத்தியதுடன் அதனை சிறிதளவு சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இக்கள்ளினை அரசர்கள், புலவர்கள், பாணர்கள், வீரர்கள், பெண்கள் என அனைவரும் அருந்திய செய்திகளை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இதனை’சிறியகட்பெறினே எமக்கீயும் மன்னே பெரிய கட்பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணும் மன்னே’ (புறநானூறு 235)பதிற்றுப்பத்து 65ல் புலவர்களுக்கும் பாணர்களுக்கும் மழை பொழிவது போல் கள் வழங்கியமை பற்றிக் கூறப்படுகிறது.புறநாநூறு 133ல் பாரி இறந்த போதும் மது ஊற்றும் சாடிகள் எப்போதும் திறந்தே இருக்கும் ஆட்டு ஊனும் சோறும் இடையறாது கிடைக்கும் என்ற செய்தி குறிப்பிடப்படுகிறது.
புறநாநூறு 114 ல் பாரியின் பறம்பு மலையில் வடிக்கப்பட்ட கள்ளின் கழிவுகள் யானையின் மலம் போல் குவிந்து கிடந்தமை பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.’பட்டு நீங்கித் துகில் உடுத்தும்மட்டு நீங்கி மது மகிழ்ந்தும்’ (பட்டினப்பாலை 106) ,’ஒண்டொடி மகளிர் பொலங்கலந்தேந்திய தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து’ (மதுரைக்காஞ்சி 24) போன்ற அடிகள் பெண்கள் தோப்பி அருந்தியயமை பற்றிக் கூறுகின்றது. வீரர்கள் – பகைவரது பசுக்களை கவர்ந்து வந்து அதனைக் கொடுத்து பழைய கள் விலைக் கடனைத் தீர்ப்பதுடன் தோப்பியும் பருகுதல் பற்றி பெரும்பாணாற்றுப்படை 142லும் வீரர்களுக்கு போதை கூடிய நறும் பிழியும் பாணர் புலவர்களுக்கு போதை குறைந்த பிழியையும் வழங்கியமை பற்றி பதிற்றுப்பத்து 40லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புறநானூறு 258, 224, 235 ஆகியவற்றிலும் அகநானூறு 113, 114, 136 ஆகியவற்றிலும் மதுரைக்ககாஞ்சி பெருநராற்றுப்படை என்பவற்றிலும் கள் வாணிபம் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பபட்டுள்ளன. ‘நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுஇல்’ (அகநானூறு 126),’கள்ளின் களி நவில் கொடி’ (மதுரைக்காஞ்சி 372),’கட்கொடி நுடங்கும் ஆவனம்’ (பதிற்றுப்பத்து 98) போன்ற தொடர்கள் தெளிவுபடுத்துகின்றன. எனவே பழந்தமிழர் வாழ்வில் மது அன்றாட பாவனைக்குரிய பொருளாகவே பயன்படுத்ப்பட்டுள்ளது என்பதும் தேயிலை முதலான பானங்கள் கண்டுபிடிக்கப்பட முன்னர் விருந்தோம்பலுக்கான பிரதான நீர் ஆகாரமாக கள் இருந்துள்ளது என்பதும் இதனை சமூகத்திலுள்ள அனைத்துப்பிரிவினரும் பருகினர் என்பதும் சங்ககால மக்களின் வழிநடைக் களைப்பைப் போக்கும் பானமாகவும் தாகம் தீர்க்கும் பானமாகவும் சக்திதரும் பானமாகவும் தோப்பிக்கள் பயன்பட்டுள்ளது என்பதும் இக்கள் அனைவரது இல்லங்களிலும் அன்றாடத்தேவைகளுக்கான உணவாக சமைக்கப்பட்டது என்பதும் சமய வழிபாடுகள், நடுகல் வழிபாடுகள், கலை நிகழ்த்துகைகள், போர், விருந்தோம்பல் என இது மக்களது வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பருகப்பட்டதுஎன்பதும் வலியுறுத்தப்பட்டதோடு இக்கட்டுரை மூலம் பண்டைத்தமிழரது பாரம்பரிய நீராகாரமான தோப்பிக்கள் தயாரிக்கும் முறையும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்புத் தமிழர்களின் உணவுசார் வழக்காறுகளும் உள்ளுர் அறிவுச் செயற்பாடும்என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.மட்டக்களப்புத் தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அவர்கள் உண்ணும் உணவு வகைகள் உணவுசார்ந்த வழக்காறுகள் என்பவற்றினூடாகத் தரிசிக்க முடிகின்றது என்பதும் மட்டக்களப்பின் பாரம்பரியமான வேளாண்மைச் செய்கையும் அதனோடிணைந்த உபபயிர்ச் செய்கையும் மந்தை வளர்ப்பும் அந்தப் பொருளாதார அமைப்பு நிர்ணயித்த மத நடைமுறைகளும் இப்பிரதேச மக்களது உணவு வகைகளையும் உணவு சார்ந்த பல்வேறு வழக்காறுகளையும் நிர்ணயித்துள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டது.
ஒவ்வொரு வேளையிலும் எத்தகைய உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும், எவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மரபைப் பின்பற்றுகின்றார்கள் என்பதும் இது பெரும்பாலும் அவர்களது விவசாயப் பொருளாதார அமைப்புடன் தொடர்புபட்டது என்பதும் கறி வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே ஒரு ஒழுங்குமுறையில் உண்பது இவர்களின் வழக்கமாகும் என்பதும் அவ்வாறே உணவை உண்கின்றபோது சில ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுகின்றார்கள்என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவையெல்லாம் அறிவியல் சிந்தனைகளுடன் கூடியவை. நம்பிக்கையின் பேரிலே கடைப்பிடிக்கப்படும் பல உணவுசார் வழக்குகள் பல உள்ளார்ந்த சுகாதார, அறிவியல்சார் உட்பொருள்களைக் கொண்டிருப்பதாக விளக்கப்பட்டது.
பிள்ளை பெற்ற தாய், சாமர்த்தியம் அடைந்த பெண் ஆகியோருக்கு குறிப்பிட்ட நாள் வரையும் எத்தகைய உணவுகளைக் கொடுக்கவேண்டும் அவற்றை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்ற நடைமுறை முற்றிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியவையாகும். அவ்வாறே பல்வேறு சடங்குகள், விசேட தினங்களின் போதான உணவு முறைகளும் அவர்களின் உணவுசார் வழக்காறுகளை மட்டுமன்றி அறிவியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளன எனவும் கூறப்பட்டது.
எனவே,மட்டக்களப்புத் தமிழர்களின் பாரம்பரிய உணவுசார் வழக்காறுகள் ஆரோக்கியமான வாழ்வினை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் உள்ளார்ந்த ரீதியில் அறிவியல் நோக்குக் கொண்டவை. இந்த வழக்காறுகள் எமது பண்பாட்டு மரபுகளை மேலுயர்த்திக் காட்டுவதற்கான சிறந்த ஆவணங்களாகவும் உள்ளன என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலில் திரவ ஓதனப் (உணவு) பயன்பாடு : மரபும் மாற்றமும்என்ற தலைப்பில் திரு .ரமணராஜா அவர்கள் தமது ஆய்வினை முன்வைத்தார். இதில் மனித வாழ்வியலுக்கான அடிப்படைக் கூறுகளாக உணவு, உடை, உறையுள் என்பன உள்ளனஎன்பதும் இவற்றுள் வாழ்வாதாரத்துக்கான முக்கிய பொருளாக இருப்பது உணவாகுமஉணவு எனவும் குறிப்பிடுவதோடு உணவு என்பது உடம்பினை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக உண்பது எனவும் தமிழர்கள் தமக்கென ஒரு பண்பாட்டு வாழ்வியலை மிகவும் தொன்மைக்காலந் தொட்டே உருவாக்கி காலந்தோறும் கடைப்பிடித்து வந்துள்ளனர்என்பதும் இத்தகைய உணவுப் பயன்பாடு ஆரோக்கியமான வாழ்வியலுக்கு அடிகோலியது என்பதும் இவை திண்ம ஓதனம், திரவ ஓதனம் என இரு வகையில் பயன்பாட்டிலிருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டது.
தொல்காப்பியர் மரபியல் ‘மெய் திரிவகையின் எண்வகை உணவில் செய்தியும் உரையார்’ (பொருளதிகாரம்- 623) என உணவின் வகையினை எண்வகையாகக் கூறுகின்றது என்பதும் இதற்கு உரைகூறிய இளம்பூரணனார் நெல், காணம் (கொள்ளு), வரகு, இறுங்கு, திணை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களை குறிப்பிடுகின்றார் என்பதும் இந்நூலில் வருகின்ற ‘உணா’ என்ற சொல் உணவினைக் குறிப்பதாக எடுத்தாளப் பட்டுள்ளமை பற்றியும் விளக்குவதோடு உணவினை பல சொற்களால் பண்டைத் தமிழர் குறித்தனர் என்பதனையும் பிங்கல நிகண்டு,’உணாவே வல்சி உண்டி ஓதனம்அசனம் பகதம் இசை ஆசாரம் உறை ஊட்டம்’ எனக் குறிப்பிடுவதாகவும்உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என ஐந்து வகையான உணவு முறை பற்றியும் நிகண்டுகள் கூறுவன சுட்டிக்காட்டப்பட்டது. . இங்கு பானகம், பாயகம், கஞ்சி,(பாற்கஞ்சி, சோறு வடித்த கஞ்சி, சாமைக்கஞ்சி, புளிக்கஞ்சி, குளிர்த்தி கால கஞ்சி) கூழ்(ஒடியல் கூழ், கோதுமை மா கூழ், உழுத்தங் கூழ், குரக்கன் கூழ்,) முதலியன பருகுவன என்னும் வகைமையினுள் அடங்கும் என வளக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மக்களின் உணவுப்பயன்பாடு தனித்துவ அடையாளத்தை உடையது. தமிழர்களின் உணவு நடைமுறை என்பது பிரதேச வேறுபாடுகளை கடந்திருப்பினும், விரத கால உணவுகள், பருவகால உணவுகள், தொழிற்கால உணவுகள், நோய்க்கால உணவுகள், சாதாரண காலங்களின் போது பயன்படுத்தும் உணவுகள் போன்ற பொதுவான தன்மைகளையும் பொருண்மைகளாக கொண்டிருப்பது விளக்கப்பட்டது. இவ்வுணவுத் தயாரிப்புகள் பற்றிய சிந்தனைகள், கருத்துக்கள், அளிப்புகள், வழக்கங்கள், பழக்கங்கள் என்பன பொருள்சாராப் பண்பாடாகவும், அவற்றின் தயாரிப்புக்குப் பயன்படும் பொருட்களை பொருள்சார் பண்பாடாகவும் கூறலாம் எனவும் இவ்வாறாக ஒரு சிறப்பான அதேவேளை ஆரோக்கிய வாழ்வியலுக்கான உணவுப்பயன்பாட்டோடு கூடிய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலானது பல்வேறு காரணிகளால் மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் கூறப்பட்டது.
‘உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’; என்ற தலைப்பில் திருமதி வானதி பகீரதன், திருமதி. பாத்திமாஅறுசியா, செல்வி இரேசா மெஹந்தி வடுகெதர ஆகிய மூவரும் தமது ஆய்வுகளை முன்வைத்தனர். பாரம்பரிய உணவு என்பது மக்கள் தாம் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவிய உணவு வகைகளையே குறித்து நிற்கின்றது எனவும் இயற்கையில் கிடைத்ததும் எதுவித மரபணு மாற்றங்களுக்கும் இரசாயன நச்சுப் பதார்த்தங்களுக்கும் உட்படுத்தப்படாத ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே குறித்து நிற்கின்றது எனவும் கறிப்பிடப்பட்டதோடு உள்ளுர் உணவுப் பண்பாடு நீண்டகாலமாக மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த உணவுப் பழக்க வழக்க நடைமுறைகளைக் குறிப்பது எனவும் அதாவது மக்கள் தாம் வாழும் நிலம் சார்ந்த அமைப்புகளுக்கேற்ப வாழ்விடம், சுற்றுச்சூழல், இயற்கைவளம் என்பவற்றின் அடிப்படையில் தமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையைக் குறிப்பது எனவும் ஒவ்வொரு இனத்திற்கும் நிலம் சார்ந்த அடையாளங்கள் உள்ளன. அதாவது சமைக்கும் முறை, பரிமாறுதல், உண்ணும் விதம் என்பன சமூகக் குழுக்களுக்கேற்ப, இனக் குழுக்களுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுகின்றன என்பதை சமூக மானிடவியலாளர்கள் சிறப்புறப் பதிவு செய்துள்ளனர் என்பதும் கூறப்பட்டது.
உணவுப் பண்பாட்டினை வாழும் பிரதேசம், மதம், சமூகக்குழுக்கள் என்பன தீர்மானிக்கின்றன எனவும் குழந்தைகளுக்கான உணவு, நோயாளர்
களுக்கான உணவு, கர்பணித் தாய்மாருக்கான உணவு, பாலூட்டும் தாய்மாருக்கான உணவு, முதியோருக்கான உணவு என்ற அடிப்படையிலும் பருவகாலங்களுக்கு ஏற்ற உணவுகள், சூடு, குளிர் உணவுகள் என்றும் சைவ, அசைவ உணவுகள் என்றும் மருத்துவ குணம் நிறைந்த உணவுகள் என்றும் உணவு உண்ணும் முறைக்கு அமைய பருகுதல், உண்ணுதல், தின்னுதல், கொறித்தல், நக்குதல் உணவுகள் உணவுகள் எனவும் அறு சுவைகளின் அடிப்படையிலும் ஊட்டச் சத்துக்களின் அடிப்படையிலும் உண்ணும் நேர அடிப்படையிலும் (காலை, மதியம், இரவு) பாகுபடுத்தி நோக்கப்படுகின்றன எனவும் விளக்கப்பட்டது.
இவ் வகைப்பாடுகளையே உணவுத் தத்துவங்கள் என வரையறை செய்ய முடியும். இவ் உணவுப் பழக்கங்களே எந்தநேரத்திற்கு எந்த உணவு நல்லது? எந்த உணவை உண்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன? அவ் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன? நாம் எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? ஏன் வயது அடிப்படையில் உணவுகளைப் பகுத்துக் கொள்கிறோம்? நோயாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கேற்றவை என ஏன் வேறுபடுத்துகின்றோம்? ஏன் உணவை இத்தகைய முறையில் உண்ண வேண்டும்? என்ற வினாக்களை கேட்கும் போது எமது உணவுப் பண்பாட்டுக்கான தத்துவார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்உணவுப் பண்பாடும் தத்துவங்களும் ஒவ்வோர் இனத்தினதும் சமூகத்தினதும் முக்கிய அடையாளங்களாக அமைகின்றன என்பதும் இவ் அடையாளங்களைப் பேணுவதும் வளர்த்தெடுப்பதும் ஒவ்வொரு சமூகத்தினதும் கடமையும் பொறுப்புமாகும் என்பதும் குறிப்பிடப்பட்டது.எமது உள்ளுர்ப் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பன மறைந்து போய் எமது உணவுப் பழக்கத்திற்கான அடையாளங்களையே நாம் இழந்து மேலைத்தேச உணவு வகைகளுக்கும் பானங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளோம். எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எமது உணவு முறைகளை எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கையளிப்பதன் மூலம் எமது உள்ளுர் உணவுக் கலாச்சாரத்தைப் பேண முடியும்.
எமது பண்டைய உணவுப் பழக்கமானது தலைமுறை தலைமுறையாக கையளிப்புப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. உணவு தயாரிக்கும் முறை, உண்ணும் விதம், உணவு வகைகள் யாவற்றையும் தாயிடமிருந்து மகள் பெற்றுக் கொள்வதைக் காண முடிகிறது. எனவே ‘உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’ என்ற பட்டத்துறைசார் கற்கையை பயிலும் மாணவர்கள் மூலம் எமது பண்பாடு கலாச்சாரத்தைப் பேணும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுக் கையளிப்பு முறையினை வருங்கால சந்ததியினருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் அறிவும் பண்பாட்டு உணர்வும் ஆரோக்கியமும் உள்ள நற் பிரஜைகளை உருவாக்க முடியும் என குறிப்பிடப்பட்டது.
நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி கலாச்சாரத் தொடர்புகள் இயந்திரமயமாக்கல் என்பவற்றால் பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கங்களுக்கும் பிற கலாச்சார உணவுகளுக்கும் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர் என்பதும் இதனால் எமது பாரம்பரிய உணவுகள் நீக்கப்பட்டு அவை இயற்கை நிலையிலிருந்து மாற்றப்பட்டு விட்டனஎன்பதும் இது தற்போது மக்களின் ஆரோக்கியத்தில் பெருந்தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன. உணவு உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்திகளை விற்பதற்காக கையாளும் தந்திரோபாயங்களாலும் சந்தைப்படுத்தல் உத்திகளாலும் மக்கள் அவ் உணவுகளால் கவரப்பட்டு அவ் உணவுகளை விரும்பத் தொடங்கி விட்டனர் எனவும் பதப்படுத்தப்பட்ட உடனடி உணவுகளாலும் செயற்கைச் சுவையூட்டிகள் நிறமூட்டிகளாலும் எமது உடலின் ஆரோக்கியம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றமை பற்றி குறிப்பிடப்பட்டது.
எமது உடலுக்கு தேவையான உணவு எது என்பதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளாமல் சுவையான உணவு எது என்பதையே தேடி உண்ணப் பழக்கப்பட்டு விட்டோம் எனவும் எமது பொருத்தமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் நாம் பல்வேறு தொற்றா நேய்களுக்கு இடங்கொடுத்துள்ளோம் எனவும் இத்தகைய எமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கவழக்க முறைகளைக் கைவிட்டு உடல் ஆரோக்கியம் பேணும் எமது பண்பாட்டு உணவுகளை எமது வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது பல்கலைக்கழகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இவற்றைத் தவிர Battle against the Killer Disease என்ற தலைப்பில் Dr K T Sundaresan அவர்களும் Benefits of Sri Lankan traditional agricultural and food practices given solution for Non- Communicable in SriLanka – An intervention by “Hela Suwaya” Organization என்ற தலைப்பில் Dr. Dahanayaka அவர்களும் தமது ஆய்வுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.