கல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்குவதற்கு கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (03) முற்பகல் அநுராதபுரம் சுவர்ணபாலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கல்வியின் மூலமே ஒரு மனிதனிடம் சிறந்த ஒழுக்க பண்பாடுகள் உருவாகின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கல்விக்காக முடியுமான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதென்றும் தெரிவித்தார். அத்துடன் அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை ஜனாதிபதி இன்று மாணவர்களிடம் கையளித்தார்.
அதேவேளை அநுராதபுரம் இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி அன்னதான மண்டபமும், மூன்று மாடி மாணவர் மத்திய நிலையமும் ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப திட்டத்தின் கீழ் 213 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.