கலைஞர் மு. கருணாநிதியின் மறைவையொட்டி ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி…
கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.
தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.
“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது. அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.
கருணாநிதி மரணம் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.
பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
*****
நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.
அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.
அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.
இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.
*****
ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே. எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.
டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.
1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.
எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.
கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
*****
கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.
காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.
கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.
கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
கருணாநிதியின்வாழ்க்கை வரலாறு
* 1924 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிக்கு பிறந்தார்.
* 1939: ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். சிறுவர் சீர்திருத்த சங்கத் தலைவரானார்.
* 1944 செப்.13: சிதம்பரம் ஜெயராமனின் தங்கை பத்மாவை மணந்தார்.
பத்திரிகையாளர், வசன கர்த்தா :
* 1945: புதுவைக்கு நாடகம் நடத்தச் சென்றபோது காங்கிரசாரால் தாக் கப்பட்டார். பெரியார் நடத்திய ‘குடியரசு’ ஏட்டுக்கு துணை ஆசிரியரானார்.
* 1946: ராஜகுமாரி என்ற சினிமாவுக்கு வசனம் எழுதினார். இதில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.
* 1947: தந்தை முத்துவேல் காலமானார். மனைவி பத்மா காலமானார்.
முதல் தேர்தல் :
* 1948 செப்.15: தயாளுவை இரண்டாம் தாரமாக மணந்தார்.
* 1949: மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளனாக பொறுப்பேற்றார்.
* 1950: திருவையாற்றுக்கு வந்த அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டினார்.
* 1953 ஜூலை 15: டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷன் பெயரை கல்லக்குடி என்று மாற்றக்கோரி ரயில் முன் படுத்து மறியல் நடத்தி கைதானார். 6 மாதம் ஜெயில் தண்டனை பெற்றார்.
* 1957 மே 4: சட்டசபையில் முதன் முதலாக (கன்னிப் பேச்சு) பேசினார்.
* பிப்.15: சேலம் மாவட்ட 3வது தி.மு.க., மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.
* ஏப்.15: சென்னை மாநகராட்சி தேர்தலில் 45 தி.மு.க., வினர் வெற்றி பெற்றதற்காக அண்ணாதுரை யிடம் மோதிரம் பரிசு பெற்றார்.
அமைச்சர் பொறுப்பு :
* 1960 செப்.17:’முரசொலி’யை நாளிதழாக மாற்றினார்.
* 1962: சட்டசபை தி.மு.க., துணைத் தலைவரானார். தி.மு.க., வில் பொருளாளரானார்.
* 1967: சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
* மார்ச் 6: அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றார்.
முதல்வராக கருணாநிதி :
* 1969 பிப்.10: அண்ணாதுரை மறைந்ததையடுத்து முதல்வராக பதவியேற்றார். பி.யு.சி. வரை இலவச கல்வி கொண்டு வந்தார்.
* ஜூலை27: தி.மு.க.,வின் தலைவராக தேர்வு.
* 1970 மார்ச்: ‘நீராருங் கடலுடுத்த’ பாடலை தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார்.
மீண்டும் முதல்வர் :
* மார்ச்15: தேர்தலில் வென்று 2ம் முறை முதல்வர்.
எம்.ஜி.ஆர்., நீக்கம் :
* 1972 அக்.14: எம்.ஜி.ஆரை தி.மு.க.,விலிருந்து நீக்கும் தீர்மானம் செயற்குழுவில் நிறைவேற்றம்.
* டிச.25: கோவையில் 5வது திமுக மாநில மாநாட்டை நடத்தினார்.
* 1976 ஜன.31: கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
* பிப்.3: தி.மு.க., அமைச்சரவை யில் இருந்தவர்கள் மீது விசாரணை நடத்த நீதிபதி சர்க்காரியா தலைமையில் கமிஷன் நியமிக்கப்பட்டது.
* 1977 ஜூன்: சென்னை அண் ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றது. மதுரை வந்த இந்திராவை கொலை செய்ய முயன்றதாக கருணாநிதி உட்பட 199 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
40 நாள் சிறைவாசம் :
* அக்.: மதுரையில் இந்திராவுக்கு கறுப்புக்கொடி காட்டிய குற்றத்திற்காக அவர் 40 நாள் சென்னை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்திராவுடன் கூட்டு :
* 1978 ஜூலை: மதுரை சம்பவத்துக்காக ஒரு பிரதிநிதியை அனுப்பி இந்திராவிடம் வருத்தம் தெரிவித்தார் கருணாநிதி.
* 1979 செப்.30: காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி உருவானது.
* 1980 ஜன.6: லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங். கூட்டணி 37 இடங்களைப் பிடித்தது.
* 1980 மே.26: சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் தோற்றது. ஆனாலும் கருணாநிதி வென்றார்.
* 1982 பிப்.15: திருச்செந்துõர் கோயில் அதிகாரி சுப்பிரமணியபிள்ளையின் மர்மச்சாவு குறித்து ‘நீதி கேட்டு நெடும் பயணமாக’ மதுரையிலிருந்து திருச்செந்துாருக்கு பாதயாத்திரை சென்றார்.
* 1984 ஜன.13: சட்டசபை தேர்த லில் போட்டியிடவில்லை. கோல்கட்டாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
* 1987 முதல் 1989 ஜனவரி வரை தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தி.மு.க.,வை வழிநடத்தினார்.
மறுபடியும் முதல்வர் :
* 1989 ஜன.21: தமிழகத்தின் 8வது சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க., 142 தொகுதிகளில் வென்றது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.
* மார்ச் 25: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஏற்பட்ட அமளியில் ஜெ.,தாக்கப்பட்டார்.
* ஏப்.13: சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
* 1989: இலங்கையில் அமைதி காக்க சென்று திரும்பிய இந்திய ராணுவம் சென்னை துறைமுகத்தில் வந்திறங்கியபோது அதனை முதல்வர் என்ற நிலையில் வரவேற்க செல்லவேண்டிய கருணாநிதி புறக்கணித்துவிட்டார். இந்திய படை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி அவர் ராணுவத்தை வரவேற்க மறுத்து விட்டார்.
மறுபடியும் டிஸ்மிஸ் :
* 1990 ஜன.30: கருணாநிதியின் அரசை பிரதமர் சந்திரசேகர் அரசு சிபாரிசுபடி ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் கலைத்தார்.
* 1991: லோக்சபா மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., படுதோல்வி. கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். பின் அவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
* 1993: வைகோவின் ஆதாயத்திற்காக புலிகள் தன்னை கொல்ல திட்டமிட்டதாக உளவு பிரிவு தகவல் தந்ததை கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் கூறியதை தொடர்ந்து கட்சிக்குள் கலகலப்பு ஏற்பட்டது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 3 நாளில் தன் முடிவை மாற்றிக்கொண்டார். பின் வைகோ கட்சியிலிருந்து நீக்கம்.
மறுபடியும் கருணாநிதி :
* 1996: தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற, கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.
தலைவர்கள் பெயர் நீக்கம் :
* 1997 ஜூலை 1: ஜாதி கலவரங்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்டங்கள், போக்குவரத்துக்கழகங்களில் தலைவர்கள் பெயர் உடனடியாக நீக்கப்படும் என்ற அதிரடி முடிவை கருணாநிதி அறிவித்தார்.
* 1998 ஏப்.3: ராஜிவ் கொலை சதியில் கருணா நிதிக்கோ அல்லது தி.மு.க.,விற்கோ தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை நீதிபதி ஜெயின் தனது இறுதி அறிக்கையில் கூறினார்.
* 2000 ஜன. 1: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.
* மார்ச் 3: மீண்டும் முதல்வராகும் எண்ணம் இல்லை என்று கருணாநிதி கூறினார்.
* 2003 ஜூன் 2: தா.கி., கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
* ஜூன் 23: தா.கி., கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்த மு.க.அழகிரியுடன் கருணாநிதி சந்தித்து பேசினார்.
* டிச.20: தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., வெளியேறியது.
* 2004 ஜன. 1: தே.ஜ., கூட்டணியிலிருந்து தி.மு.க., அதிகாரப்பூர்வமாகவெளியேறியது ‘விஷஜந்துக்களிடமிருந்து வெளியேறினால் போதும்’ என்று வெளியேறியதாக கருணாநிதி தெரிவித்தார்.
* 2006 மே 11: கருணாநிதி தலைமையிலான தி.மு.க., கூட்டணி தமிழக சட்டசபையில் வெற்றி.
* மே 13: தமிழகத்தில் முதல்வராக 5வது முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.
* அக். 1: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி கருணாநிதி தலைமையில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சென்னையில் உண்ணாவிரதம்.
* டிச. 15: ஸ்டாலின் தலைமையில் நெல்லையில் நடந்த தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டார்.
* 2008 பிப். 1: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் மசோதாவை சட்டசபையில் கருணாநிதி தாக்கல் செய்தார்.
* ஜூன் 30: சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.
* அக். 24: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து சென்னையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கருணாநிதி பங்கேற்றார்.
* 2009 ஏப். 27: இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தக் கோரி சென்னையில் கருணாநிதி உண்ணாவிரதம்.
* 2010 மார்ச் 13: புதிய சட்டசபை திறப்பு விழா நடந்தது.
* ஜூன் 23: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 – 27 வரை நடைபெற்றன.
* 2011 மே 13: கருணாநிதி 2011 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 12வது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். 23 இடங்களை மட்டுமே பெற்ற தி.மு.க., ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
* 2012 ஆக., 14 : சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்கில்’ இணைந்தார். இதில் கருத்துகளை வெளியிட்டார்.
* 2014 மே: லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம். அனைத்து இடங்களிலும் தோல்வி.
* 2016 மே 19 : சட்டசபை தேர்தலில் 89 இடங்களை பெற்ற தி.மு.க., மீண்டும் ஆட்சியை இழந்தது.
* 2016 மே 25 தேர்தலில் வெற்றி பெற்று 13வது முறையாக எம்.எல்.ஏ., வாக பதவியேற்பு.
* ஜுன் 3 : கருணாநிதி 93வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
* 2016 டிச., 1 – 23 : உடல்நலம் பாதிப்பு. டிரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டது.
* 2017 அக்., 19: கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து, முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார்.
* டிச., : ஓராண்டுக்குப்பின் கருணாநிதி அறிவாலயம் வந்தார்.
* 2018 ஏப்., 29: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கருணாநிதியை வீட்டில் சந்தித்தார்.
* ஜூன் 3: 95வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு கையசைத்தார்.
* ஜூலை 18; புதிய சுவாச குழாய் பொருத்தப்பட்டது.
* ஆகஸ்ட் 7 : உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.