கொலை குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.யாழ் குருநகர் பகுதியில் விசாரணைக்கென அழைத்துச் சென்றவரை கொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது
குறித்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரம்பர் 10ம் திகதி ஞானசிங்கம் அன்டன் குணசேகரம் என்பவரை இராணுவத்தினர் பயங்கரவாதி எனத் தெரிவித்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பில் லெப்டினன் கேர்ணல் டோனி பாத்லமியுஸ், மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் கேர்ணல் பிரியந்த ராஜகருணா ஆகிய மூன்று இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் பியந்த ராஜகருணா என்ற இராணுவ வீரர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் அனுமதியுடன் அனுராதபுரம் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்று வந்தநிலையில் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதில் கொல்லப்பட்ட நபரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் தெரிவித்துள்ள நிலையில் இரு ராணுவத்தினருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் முதலாவது எதிரியான டோனி பாத்லமியூஸ் என்பவருக்கும் கொலைக்கும் தொடர்புகள் இல்லையென தெரிவித்து அவரை விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment
Even justice comes at last. May God bless our mother Sri Lanka.