யாழ்ப்பாணம் நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் ஆலயத்திற்குள் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு இணுவில் தாவடி போன்ற பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பத்துடன் தொடர்புடைய ஏனையோரை காவற்துறையினர் தேடி வரும் நிலையில் சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் மூலமாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
எனினும் அவரைப் காவல் நிலையத்தில் சரணடையுமாறு நீதிவான் தெரிவித்ததையடுத்து நேற்று முன்தினம் அவர் காவல் நிலையத்தில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார். அத்துடன் குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிரதீபன், சந்தேகநபருக்கும் வாள்வெட்டுச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் நண்பர் ஒருவரை சந்திக்கவே அவ் இடத்திற்குச் சென்றதாகவும் கூறினார்.
வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமாகிய வி.இராமக்கமலன், சந்தேக நபரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.