குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்களாக இருவர் கடமை புரிந்த நிலையில் ஒருவர் வருடாந்த இடமாற்றம் மூலம் வெளிமாவட்டத்திற்குச் சென்ற நிலையில் மற்றைய மகப்பேற்று நிபுணரும் தமது வெளிநாட்டுப் பயிற்சிநெறிக்காக விடுகைபெற்றுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பவதிகள் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வழமையான நடைமுறைகளின் பிரகாரம் மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சியிலிருந்து அதனிலும் மேம்பட்ட வசதியுடைய வைத்தியசாலையான யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கே நோயாளர்கள் இடம்மாற்றப்படவேண்டும். மாஞ்சோலை வைத்தியசாலையானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கும் நிலையில் கிளிநொச்சியிலிருந்து கர்ப்பவதிகளை மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலைக்கு மாற்றுவது இரண்டு உயிர்களுடன் விளையாடும் செயல் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்தோடு இவ்வாறு அனுப்படும் கர்ப்பவதி ஒருவருக்கு மேலதிக சிகிசை தேவைப்படும் போது அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து யாழப்பாணம் வைத்தியசாலைக்கே அனுப்படுகின்றார்.
இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மையில் நியமிக்கப்பட்ட உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நிரந்தர மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலையில் எவ்வாறு உரிய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தம்மால்தான் வைத்திய நிபுணர்கள் வடக்கிற்கு நியமிக்கப்படுவதாக அறிக்கைகள் விடும் வடமாகாண வைத்திய மன்றமும், தமது வாகன அனுமதிப்பத்திரத்திற்காக வேலைநிறுத்தம் செய்யும் அரச வைத்தியர் சங்கமும், சிற்றுண்டிச் சாலையின் வருமானத்தில் மட்டும் கண்ணாயிருக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கமும் மிகவும் அடிப்படை விடயமான மகப்பேற்று நிபுணர் நியமனத்தில் அக்கறை காட்டாது இருப்பது ஏன் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் அவர்களை தொடர்கொண்டு வினவிய போது
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் இருந்த இரண்டு மகப்பேற்றியல் வைத்தியர்களில் ஒருவர் ஒரு மாத சுகயீன விடுப்பில் இருப்பதாகவும், பிரிதொருவர் தனது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பதனாலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் இருப்பவர் மீண்டும் தனது கடமைக்கு திரும்பாது விடின் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பட்ட கா்ப்பிணித்தாய்மார்கள் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கே அனுப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார