ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ றிக்கோவில், கடந்தாண்டு தாக்கிய மரியா சூறாவளி காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, சுமார் 3,000 என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னர் அவ்வெண்ணிக்கையானது 64 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில் அச்சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, மிக அதிகமென, ஊடகங்களும் செயற்பாட்டாளர்களும் தொவித்து வந்தநிலையில் அது தொடர்பாக ஆராயுமாறு, ஆளுநரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்தாண்டு செப்டெம்பரில் மரியா தாக்கியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில், மரியாவின் நேரடித் தாக்கத்தாலேயோ அல்லது மறைமுகத் தாக்கத்தாலேயோ, 2,975 பேர் உயிரிழந்தனர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால வரலாற்றில், மிக மோசமான சூறாவளியாகக் கருதப்படும் கத்ரினா சூறாவளி மூலமாக, 1,200 தொடக்கம் 1,800 வரையிலானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது