கொழும்பில், எதிர் வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியை முடக்குவதற்கு அரசாங்கம் எவ்வகையிலான சதி முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றை தகர்த்து பேரணியை நடத்திக் காட்டுவோம் என கூட்டு எதிர்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமை, தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல், தொழிலின்மை, படைப்பிரிவனர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அரசாங்கத்திற்கு எதிராக குறித்த பேரணியை கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் கூட்டு எதிர்கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான இருபது இலட்சம் வரையிலானோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர் கட்சி தெரிவிக்கின்றது.
அரசாங்கம் இந்தப் பேரணியை நடத்த விடாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற காரணத்தினால் இந்தப் பேரணி கொழும்பில் எங்கு நடைபெறவுள்ளது என்ற விடயம் இன்னும் கூட்டு எதிர்கட்சியினால் இரகசியமாக பேணப்பட்டு வருகிறது.
மேலும் புதன் கிழமை காலை கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் பேரணி நடைபெறவுள்ள இடத்தை அறிவிப்பதாகவும் கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.