குளோபல் தமிழ் செய்தியாளர்
மட்டு – பதுளை வீதியில் அமைக்கப்படும் குடிதண்ணீர் அடைக்கும் தொழிற்சாலையை மூடுமாறுகோரி, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான கடையடைப்பினால் முடங்கியது. மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூடட்மைப்பும் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்கியது.
நூற்றுக்கணக்கான நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள குடிநீர் தொழிற்சாலையால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏறாவூர்ப்பற்று – பெரியபுல்லுமலைப் பிரதேசத்தில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தண்ணீர்த் தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.
குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக காணப்படும் இப்பகுதிகளில் காணப்படும் சிறியளவு நீரையும் பெற்று இவ்வாறு தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் இடம்பெற்றன.
இத்தொழிற்சாலையினால் 83 கிராமங்கள், 11 கிராமசேவகர் பிரிவுகள், 4500இற்கு மேற்பட்ட குடும்பங்கள், 15500இற்கு மேற்பட்ட மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.