உள்நாட்டு போர் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூடானில் அரசாங்கத்தை கலைத்து அந்நாட்டு ஜனாதிபதி பஷிர் உத்தரவிட்டுள்ளார். தெற்கு சூடானில் அரச படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசு படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளதனால் ; அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தடுமாறிய அரசாங்கம் மானியங்களை தடை செய்ததால் பொருட்களின் விலை அதிகரித்தமையினால் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.அங்குள்ள பாதிக்கும் மேற்பட்டோர் போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ஓமர் அல் பஷிர் தலைமையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் ; அரசாங்கம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.