வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் இலங்கை அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு விஜயகலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தால் அவர் பெரும் அரசியல் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து தனது, இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்தும் விலகியிருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான நீதியை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இலங்கை அரச தரப்பில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதுவும் கூறப்படவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என மகிந்த அணி தரப்பில் அண்மையில் கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே வடக்கில் உள்ள கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும் என விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ள கருத்து தென்னிலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.