அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்திகதி அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகள் சந்தித்து பேசியதன் அடிப்படையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட சம்மதம் தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் உன் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் வோஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு பேரவையினை நாளை (17.09.18) கூட்டவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது