பூநகரிப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தின், மிகவும் பின் தங்கிய வேரவில் கிராமத்தின் பாடசாலை சமூகத்திடமிருந்து, பாடசாலைக்கான நீர் விநியோகம் சம்பந்தமான கோரிக்கை ஒன்று FEED அமைப்பிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
பாடசாலையில் இரண்டு கிணறுகள் உள்ளபோதும் அவற்றில் உள்ள நீர் குடிப்பதற்கோ அன்றி சமையல் செய்வதற்கோ உகந்ததாக இல்லையென்றும், பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி, பாடசாலை விடுதிகளில் தங்கியிருந்து கடமையாற்றும் ஆசிரியர்களும் இதனால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலே FEED அமைப்பினூடாக, பாடசாலைக்கு அண்மையாக அமைந்துள்ள கிணற்றில் இருந்து நல்ல நீரைப் பெற்றுப் பாடசாலைக்குத் தருவதற்கு புலம்பெயர்ந்து வாழும் கொடையாளி ஒருவர் முன்வந்துள்ளார்.
இலண்டனில் வதியும், ‘தாய்’ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் . பாஸ்கரன் பார்த்தீபன் பாடசாலையின் நீர் விநியோகக் கட்டமைப்பினை செயற்படுத்தும் செயற்திட்டத்திற்கான செலவினை பொறுப்பெடுத்துள்ளார்.
உரிய நிர்வாக நடைமுறைகள் பூர்த்தியானதும், மிக விரைவில் செயற்திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலை சமூகம், FEED அமைப்பின் ஊடாக பாஸ்கரன் பார்த்தீபனுக்கு தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.