குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதாகவும், அவற்றை சுட்டிக்காட்டிய போது அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர் எனவும் அதனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக நேற்றுமுன்தினம் அதிகாரிளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன் போது, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக கலந்துரையாடினோம். முக்கிய வீதிகளில் உள்ள குறைபாடுகளை ஒளிப்படங்களின் ஆதரத்துடன் நாம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
குறிப்பாக யாழ்நகரின் பிரதான வீதிகளில் வீதிக் கோடுகள் உரிய முறையில் வரையப்படவில்லை. அதிலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னாள் உள்ள பாதசாரி கடவை ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதுடன் மண்டபத்தின் வாசலுக்கு நேரெதிரே காணப்படுகின்றது.
இதனால் மண்டபத்தில் இருந்து வீதிக்கு வரும் சிறுவர்கள்,பெரியவர்கள் திடீரென கடப்பதால் அதிக விபத்து அங்கு இடம்பெறுகின்றது.எனவே அந்த கடவையை அந்த இடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி மாற்றி அமைக்க வேண்டும். என வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கோரியுள்ளேன்.
மேலும் யாழ்ப்பாண நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக யாழ் போதனா வைத்தியசாலை வீதி காணப்படுகின்றது. அங்கு மூன்று முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் உள்ளன.அவர்களின் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். அத்துடன் யாழ் மாநகர சபையின் பொறியியலாரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இருவரிடமும் முச்சக்கர வண்டிகளை அங்கு நிறுத்தது.அங்கு சேவையில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பு இலக்கங்களுடன் ஓர் விளம்பர பலகையை வைப்பதன் ஊடாக அங்கு வாகனங்களின் எண்னிக்கை குறைவாக இருக்கும்.
அவ்வாறு செயற்படடால் வாகன நெரிசல் குறையும்.இந்த முறை பிற மாவட்டங்களிலும் உள்ளன.இதை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் யாழ் நகரில் உள்ள சில புடவை வியாபார நிலையங்கள் நடைபாதைகளில் புடவையையும்,பொம்மைகளையும் காடசிப் படுத்துகின்றனர்.இதனால் நடைபாதையில் பயணிக்க வேண்டிய மக்கள் வீதியில் நடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகின்றது.எனவே அவ்வாறான கடைக்காரர்களுக்கு எதிராக சடட நடவடிக்கையை இனி எடுப்போம் என தெரிவித்தார்