வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற எவரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு உண்டெனத் தெரிவித்த, அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் உரை குறித்த நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்தார். அதேநேரம், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் பலர், காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடுகள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்த சாலிய பீரிஸ், எவ்வாறாயினும், அரசியல் மேடைகளில் இடம்பெறும் கருத்துகளுக்குப் பதில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகக் குறி்பிட்டுள்ளார். இருப்பினும், முன்னாள் அமைச்சரின் உரை குறித்த அலுவலகத்தின் நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு கொழும்பில்…
வலிந்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு, கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த வகையில் மேல்மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பை, கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேசக் கற்கைகளுக்கான நிலையத்தில், குறித்த சந்திப்பு நடத்தப்பவுடவுள்ளதெனவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் 7ஆவது மக்கள் சந்திப்பு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது இதன்போது, மேல் மாகாணத்தில் காணாமல் போனோர், காணாமல் போன சந்தர்ப்பம், திகதி என்பன குறித்த தரவுகள் திரட்டப்படவுள்ளனவெனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம், ஏனைய கலவர நிலைமைகளின் போது காணாமல் போனோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தரவுகளைத் திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்தும் வரும் நிலையிலேயே,குறித்த அலுவலகத்தின் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு, கொழும்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.