இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்த 19 வயதான அல்டி நொவல் அடிலாங் (Aldi Novel Adilang ) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவினை தாக்கிய புயலினால் அவரது படகு அடித்து செல்லப்பட்டது.
இதனையடுத்து கடலில் தொடர்ந்து தனியாக 49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் இறுதியில் அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்ற போதும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
49 நாட்களுக்கு பின்னர் பனாமா நாட்டு டாங்கர் கப்பலுக்கு ரேடியோ சிக்னல் கொடுத்து தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தியதனையடுத்து அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.
கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டும் கடல் நீரை துணியால் வடிகட்டி பருகியும் உயிர் பிழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.