வடக்கு கிழக்குக்கு அதிகாரப் பகிர்வினை வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் எனும் கருத்தானது தவறானது எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரருக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்பதும் தவறான கருத்து எனத் தெரிவித்த அவர் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாட்டை ஸ்திரமற்றதாக்குவதற்கு எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.