குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களின் பிரச்சினைகள் தேவைகள் கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (08.12.2016) கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில நடைபெற்றது.
இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் (ஒபர் சிலோன்) ஏற்பாட்டில கரைச்சி உதவித்திட்டபணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் முன்வைத்த தேவைகள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தங்கள் அதிகாரத்திற்குட்பட்டு அடையக்கூடிய தீர்வுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழங்கினார்கள். காணிப்பிரச்சினை வாழ்வாதாரம் வீடு குடியுரிமை போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
மக்களால் முன்வைக்கப்பட்ட விடயமாக மீளத்திரும்பும் மக்களுக்கு குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டால் அவர் ஊடாக எம்முடைய தேவைகளை முன்வைக்கக் கூடியதாய் இருக்கும் மேலும் மீள்திரும்பியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்டப் பதிவாளர் காணி அதிகாரி மற்றும் இந்தியாவிலிருந்து மீள் திரும்பிய மக்கள் பலர் கலந்துகொண்டனர்.