பாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வழங்கும் ஆதரவினாலேயே இஸ்ரேல் தொடர்ந்து தனது இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஐ.நா.வின் எந்த ஒரு விதிமுறைகளையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் கடை பிடிப்பதில்லை. அமெரிக்காவை நாங்கள் தற்போது புதிய கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம். அமைதி முயற்சியில் இனிமேலும் அமெரிக்க மத்தியஸ்த நாடாக இருக்க முடியாது என்பதுடன் எங்களின் நண்பனாகவும் இருக்க முடியாது என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா மேற்கொள்ளும் நலத்திட்டங்களுக்கு இனிமேல் நிதியுதவி அளிக்கப்போவதில்லை என ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டுகிறது. எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல. நாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாகவும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்ததன் பின் அமெரிக்கா மீது பாலஸ்தீனம் கடும் அதிருப்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது