சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாகவும் டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.
மேலும், ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதம் 4-ம் திகதிக்குப் பின்னர் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற காரணங்களால் டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 72.91 ஆக இருந்த நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 43 சதம் சரிந்து 73.34 எனும் நிலையை எட்டியுள்ளது எனவும் இது வரலாறு காணாத சரிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.