171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு மாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களுக்கு அரசியல் தலையீடுகளற்ற வகையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தகுதியானவர்களையே உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன் போது சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆர்.ஜெயகேசரம் கொண்டு வந்த குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணத்தில் இயங்கும் மத்திய மற்றும் மாகாண அரச நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு ஆயிரக்கணக்கில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழில் கடமையாற்றக்கூடிய தகுதியானவர்களை நியமனம் செய்ய இலங்கை அரசாங்கம் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையின் அரச சேவையில் தற்போதைய நிலையில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஆகையால் எதிர்காலத்தில் அரச சேவையில் தமிழ் மக்களுக்குரிய பங்கினை உறுதிசெய்யுமாறும் அரசியல் தலையிடுகளற்ற வகையில் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர்; நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இச் சபை கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love