நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதெனவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். மேலும் கைதிகள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்களிள் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் போராட்டம் மேற்கொள்வது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த அவர் இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை எனவும் அவ்வாறு அரசியல் கைதிகள் இருப்பதாக யார் கூறுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறைச்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எனவும் 2009 ஆம் ஆண்டிலிருந்து இருப்பவர்களும் சிறையில் இருக்கின்றனர் எனவும் அவர்களது வழக்குகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்