குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்பிற்குள் உள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து வடமராட்சி கிழக்குப் பகுதியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்த 8 நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கடந்த 25ம் திகதி கட்டளை பிறப்பித்தது. அதனை அடுத்து அங்கிருந்த மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி அங்கிருந்து சென்றனர். .
இதன் பிரகாரம் மருதங்கேணி , தாளையடிப் பகுதிகளில் இருந்து 8 நிறுவனங்களிற்கும் சொந்தமான 32 வாடிகளில் வேலை செய்த 850ற்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அங்கிருந்து வெளியேறிய மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் கடல் அட்டை பிடிப்பதற்கான வாடிகளை அமைக்கின்றனர்.
சாலைப் பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தினை அண்டிய பகுதிகள் உள்ளூர் மக்களோ அல்லது மீனவர்களோ கடந்த காலத்தில் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பிற மாவட்ட மீனவர்கள் மட்டும் அப் பகுதியில் தொழில் புரிந்து வந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது அதிக மீனவர்கள் அப் பகுதியில் வந்து குவிந்தவண்ணம் உள்ளதனால் உள்ளூர் மீனவர்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.