பிரேசிலில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்குபதிவில் சர்சைகளை எழுப்பியிருந்த வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் 50 சதவீத வாக்குகளை பெறாததால் அவர் இடதுசாரி தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹதாத் உடன் எதிர்வரும் ஒக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று வாக்குபதிவில் போட்டியிடவுள்ளார்.
முதல் சுற்றில் பதிவான அனைத்து வாக்குகளும் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட தாகவும் அதில் சயீர் பொல்சனாரூ 46 சதவீத வாக்குகளையும் ஹதாத் 29 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டாம் சுற்றில் சமநிலை அடைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
சயீர் பொல்சனாரூவின் சமூக தாராளவாத கட்சி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுடன் சமநேரத்தில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலிலும் அதிக இடங்களைப் பெற்றுள்ளது, இடதுசாரிக் கட்சிகள் முன்னணியில் இருந்த பிரேசில் அரசியலில் நிகழ்ந்த மிகப்பெரும் மாற்றம் இது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ராணுவத் தளபதியான சயீர் பொல்சனாரூ தெரிவித்த கருத்துகள் பல சர்ச்சையை கிளப்பியிருந்தன. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரான இவருக்கு பல மில்லியன் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. பொல்சனாரூ பாரம்பரிய பண்பாட்டை பாதுகாப்பார் என அவர்கள் நம்புகின்றனர்.