தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். அதேவேளை கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் கடந்த முதலாம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து 2 படகுகள் தவிர ஏனைய படகுகள் கரை திரும்பியிருந்தன. இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் நேற்று காலை இவ்விரு படகுகளும் கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 105 கடல் மைல் தொலைவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு 19 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று காலை நிலவரப்படி, கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 பேரைத் தவிர ஏனையவர்கள் கரை சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.