ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் இன்றும் அங்கு புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை இரண்டு முக்கிய கட்சிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் புறக்கணித்துள்ளமையினால் வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு நடைபெற்ற இரண்டு நாட்களான கடந்த திங்கள், புதன் கிழமைகளில் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் இடம்பெற்ற மோதலின் போது ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றதனைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இன்றும் பாதுகாப்பு கருதி புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகள் போராட்டம் காரணமாக இந்த வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.