டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது . கடந்த வருடம் நவம்பர் 21ம் திகதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலினையடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 காவல்துறையினர் இணைந்து உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர்.
இதன்போது அங்கிருந்த கைதிகளுக்கும் காவல்துறையினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக மாறியதில் 18 கைதிகள் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இதற்கெதிராக n;டல்லி உயர்நீதிமன்றில் கைதி ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், உண்மை கண்டறியும் குழு அமைக்க உத்தரவிட்டதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கைதிகள் தாக்குதலுக்கு ஆளானதால் காயம் அடைந்தனர் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து உண்மை கண்டறியும் குழு இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்தநிலையில் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 53 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஏற்கனவே தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.