போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் ஊடாக சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டு சமுர்த்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
சமுர்த்தி வங்கிக்கும் வீட்டுக்கும் தினமும் அலையும் ஏழை மக்கள் இதனாலேயே பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏழை மக்களின் சேமிப்பு நிதி துஷ்பிரயோகத்திற்கும் மோசடிக்கும் உள்ளாக்கும் சம்பவங்கள் சிலவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடிகள் கண்டறியப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சமுர்த்திப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் சிலர் மக்களின் பெயரை பயன்படுத்தி அவர்களின் சேமிப்பில் உள்ள நிதியை கடன் பெற்று தமது தேவைகளுக்கு பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய அலுவலர் ஒருவரின் சம்பள ஏற்றம் கடந்த வருடத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதெனினும் கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றும் இதுவரையில் பொதுமக்கள் பணம் மீள செலுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மற்றுமொரு சமுர்த்தி அலுவலர் பொதுமக்களின் பணத்தில் ஒருஇலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தது கணக்காய்வு மூலம் உறுதி செய்யப்பட்டும் இதுவரை எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவ் அலுவலர் ஆளும் தரப்பின் அமைச்சர் ஒருவரது இணைப்பாளராக செயற்படுகின்றமை காரணமாகவே இந்த மோசடி குறித்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
ஏழை எளிய மக்களின் உழைப்பினாலும் சேமிப்பாலும், அவர்களுக்காக அரசால் ஒதுக்கப்படும் சிறிய தொகை நிதியில் அலுவர்கள் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானது என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.