கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.டினேஷ் கனேரியா கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கழக அணியில் இணைந்து விளையாடிய போது அனு பாட் என்ற சூதாட்ட முகவருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் முறைப்பாடு எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் வெஸ்ட்பீல்ட் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
கனேரியாவை இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணைக்குட்படுத்தியதைத் தொடர்ந்து, கனேரியா பாகிஸ்தான் அணியில் இருந்துநீக்கப்பட்டார்.மேலும் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாட வாழ்நாள் தடைவிதித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை கனேரியாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தடை விதித்தது.
ஆனால், டினேஷ் கனேரியா தான் ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வந்தார்.இந்தநிலையில் கனேரியா அல்ஜஸிரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் 6 ஆண்டுகளுக்குப் பின் தான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள், என்னுடைய ரசிகர்கள், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் எனது சூழலை புரிந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள்.
நான் சூதாட்ட தரகர் அனு பாட்டுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்னை மன்னித்து விடுங்கள். அதற்கான விலையைக் கடந்த 6 ஆண்டுகளாக அனுபவித்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.