அ.தி.மு.க.வில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த 2 நாட்களாக போயஸ் கார்டனில ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்ற நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 32 அமைச்சர்களும் சசிகலாவை சந்தித்து அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மதியம் அவைத் தலைவர் மதுசூதனன், உட்பட்டோர் சசிகலாவை சந்தித்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் புரட்சித்தலைவி அம்மாவின் நிழலாக இறுதிவரை இருந்து அவரின் மெய்க் காப்பாளராக உயிர் காக்கும் தோழியாக உன்னத சேவகியாக உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் சசிகலா.
எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் ஜெயலலிதா சந்தித்த காலகட்டங்களில் அவருக்கு உற்ற துணையாக இருந்து 33 ஆண்டுகளாக அந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்.
இந்த இயக்கத்தை ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக் கோப்புடன் ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒரே வழி சசிகலா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது என தெரிவித்துள்ளார்.