துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்தில் பத்தரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி என்பவர் அண்மையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றநிலையில் காணாமல் போயிருந்தார்.
அவர் தூதரகத்துக்குள் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என பல தரப்பினாலும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில சவூதி அரேபியா மறுத்து வந்தது. மேலும் பத்திரிகையாளர் ஜமால் காணாமல் போனமை தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் சவூதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி காவல்துறை அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவூதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவூதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது