சகோதர்களுக்கு இடையிலான சண்டையை விலக்க சென்ற சகோதரன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்து உள்ளார். வடமராட்சி தும்பளையை சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) எனும் நபரே அவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மூத்த சகோதர்கள் இருவரும் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தமக்குள்ள மோதிக்கொண்டு உள்ளனர். அந்த மோதலை விலக்கி விட சென்ற இளைய சகோதரன் மீது மோதலில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி உள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். அதனை அடுத்து சடலம் மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
அது தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளனர்.
வயோதிப பெண் கழுத்து வெட்டி படுகொலை :
அதேவேளை வடமராட்சி குடத்தனை பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திங்கட்கிழமை நள்ளிரவு கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குடத்தனை பொற்பதி பகுதியை சேர்ந்த தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) எனும் வயோதிப பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
குறித்த வயோதிப பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குடத்தனையில் உள்ள தனது வீட்டில் கணவனுடன் வசித்து வந்துள்ளார். அத்துடன் வீட்டுடன் சேர்ந்து சிறிய வர்த்தக நிலையம் ஒன்றினையும் நடாத்தி வந்துள்ளனர்.
அந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வயோதிப பெண்ணின் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Add Comment