இலங்கை

இணைப்பு2 – என்னை விடவும் மோசமான கள்வர் ஒருவரே என்னைக் கைது செய்ய வந்தார் – நாமல் ராஜபக்ஸ

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு

‘என்னை விடவும் மோசமான கள்வர் ஒருவரே என்னைக் கைது செய்ய வந்தவர்’ என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் மேலும் வழக்குகளை தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைக் கைது செய்வதற்காக வந்திருந்த காவல்துறை உத்தியோகத்தர், கொலைக் குற்றச் செயல் தொடர்பில் கைதாகி பிணையில் விடுதலையானவர் எனவும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே குறித்த காவல்துறை உத்தீயோகத்தருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தம்மைக் கைது செய்ய வந்திருந்த உத்தியோகத்தர் தம்மை விடவும் மோசமான கள்வர் எனவும் நாட்டில் கொலைக் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளதாக காவல்துறை மா அதிபர் கூறி வருவதாகவும், காவல்துறை திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கள்வர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேணடுமெனவும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சருக்கும் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது – நாமல் ராஜபக்ஸ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவது வெட்ட வெளிச்சமாகவே தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர்  வற் வரி திருத்தச் சட்டம், பியர் இறக்குமதி செய்வது தொடர்பிலான வரிச் சலுகை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை வெளிச்சமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

namal
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக மக்கள் மத்தியில் வந்து ஓர் விடயத்தை கூறும் போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வேறு ஒர் விடயத்தை அமுல்படுத்தும் நிலைமையே தற்போது நாட்டில் காணக்கூடியதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வற் வரி தொடர்பில் மக்கள் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி உறுதியிட்டு கூறிய போதிலும், வசனங்களை மாற்றியமைத்து பழைய வற் வரி சட்டத்தை நிதி அமைச்சர் அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 Comments

Click here to post a comment

Leave a Reply

 • <<>>

  <<>> நன்றி: GTN, 10/10/2016.

  முறைகேடாக ஆட்சி செய்த/ செய்கின்ற, கொலை, ஊழல் மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பல அரசியல்வாதிகள் 2 1/4 கோடி மக்களை ஆளமுடியுமென்றால், பெருந்தொகையான அரச பணத்தைக் கொள்ளையடித்த ஒருவனை, இன்னுமொரு குற்றவாளி கைது செய்வதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை? எம்மை ஆள்பவர்களில் மிகச் சிலரே இன்னும் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்கள் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

  நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட ஒருவரைக் கடமையில் ஈடுபடுத்தியமையால், அவர் தன் கடமையைச் செய்ய நேர்ந்தமை யார் குற்றம்? சட்டப்படி இது தவறென்றால், இது தானே இலங்கையில் சுதந்திரமடைந்த நாளில் இருந்து நடந்து வருகின்றது? திரு. மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், தற்காலிகமாக சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பலர், சட்டரீதியான கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையைத் திரு. நாமல் ராஜபக்ஷவினால் மறுக்க முடியுமா?

  திரு. நாமல் ராஜபக்ஷவின் மானநஷ்ட(?) வழக்கு உண்மையிலேயே விந்தையானதுதான்! குற்றச் சாட்டுக்குள்ளான ஒருவரை கைது செய்து தடுத்து வைத்து விசாரிப்பதென்பது, புதுமையல்லவே? அவரை வெளியே விட்டால், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பாரென்று நீதிபதி கருதினால், தடுத்து வைத்து விசாரிப்பதென்பது நடைமுறையில் உள்ளதொன்றுதானே? மேலும், தடுத்து வைத்ததென்பது, இவரைப் பொறுத்தவரை ஒரு ஓய்வுகாலம்தானே? அவருக்கான சிறையென்பது ஒரு நட்சத்திர விடுதி வாழ்க்கைதானே? திட்டமிட்டுப் போலிக் குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்ட எம்மவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் எதையாவது இவர் அனுபவித்திருப்பாரா?

  சட்டம் படித்த(?) திரு. நாமல் ராஜபக்ஷ விளம்பரம் கருத்திச் செய்கின்ற நடவடிக்கைகள் வெற்றியளிக்க, இது ஒன்றும் மகிந்த ஆட்சிக் காலமல்லவே? அந்நாட்களில் இடம்பெற்ற முறைகேடான நீதிமன்றத்த தீர்ப்புக்கள் ஒன்றா, இரண்டா?

  இலங்கையைப் பொறுத்தவரை, ஆளும் வர்க்கமும், ஆளப்படும் வர்க்கமும் இரண்டுபட்டுத்தான் உள்ளன! ‘ஆளப்படும் பெரும்பான்மையினருக்குக்’ கூட, நீதி என்பது சந்தர்ப்ப வாதமே? ஆட்சிகள் மாறினாலும், ‘குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கப் படுவதென்பது’, மிக அரிதாகவே காணப்படுகின்றது? அதற்கு மைத்திரி ஆட்சி மட்டுமென்ன விதிவிலக்கா? குற்றச்சாட்டுக் குள்ளான முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும், படையதிகாரிகளுக்கும் எதிரான விசாரணைகளைக் கண்டித்தன் மூலம், இந்நாள் ஜனாதிபதியும் இதை நிரூபித்திருக்கின்றார்?

  ஆக, நல்லாட்சியில், திட்டமிட்ட இனவழிப்புக் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படப் போவதுமில்லை, அதைச் செய்த யாரும் தண்டிக்கப்படப் போவதுமில்லை!