இலங்கை பிரதான செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம் – ஜகத் லியனாராச்சி

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். அதுபற்றி தெளிவடைந்திருத்தல் அவசியம் என்று ட்ரான்ஸ்பெயரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி  தெரிவித்திருக்கி;ன்றார்.
dsc08900
பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் செய்தியாளர்கள் என பலதுறைகளையும் சார்ந்தவர்களுக்கு தகவல் அறியும் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக, வவுனியா ஓவியா தங்ககத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.
சமூக வலுவூட்டல் பிரஜைகள் அமைப்பு, நலிவற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு, மாற்று வலுவுள்ளோருக்கான புனர்வாழ்வு அமைப்பு, ஊடகத் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய அமைப்புக்கள் இந்த செயலமர்வை ஒழுங்கமைத்திருந்தன. இதற்கான நிதி அனுசரணையை போர் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பு வழங்கியிருந்தது.
தகவல் அறியும் சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஊடகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் லங்கா பேலி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.பிரியதர்ஷன, போர் மன்றம் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் ஆசிய பிராந்திய இணைப்பாளர் அலன், அந்த அமைப்பின் திட்ட இணைப்பாளர் மொகமட் அசாட், நலிவற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
dsc08905
அங்கு தகவலறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கமளித்த சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி மேலும் தெரிவித்ததாவது:
கடந்த 1996 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவலறியும் உரிமைக்கான கோரிக்கையானது, 2001 ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் அது வெற்றி பெறவில்லை. பதினைந்து வருடங்களின் பின்னர் இப்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய நல்லதொரு சட்டம். அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்பில், பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு இது வழிசமைத்திருக்கின்றது. ஆயினும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டம் எந்த வகையில் செயற்படுத்தப்படப் போகின்றது என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன. அது மட்டுமல்லாமல், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய விதி முறைகள், ஒழுங்குச் செயற்பாடுகள் என்பன இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
தகவலறியும் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட வேண்டிய ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இது வரையில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணமாகும்.தகவலறியும் உரிமை என்பது முழுமையான சுதந்திர உரிமையல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களை மட்டுமே இதன் மூலம் அறிய முடியும்.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள், தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத்தக்கூடி விடயங்கள், வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகத் தகவல்கள் போன்றவற்றை இந்தத் தகவல் அறியும் உரிமையின் கீழ் அறிய முடியாது.நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான பல சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிர்வாக நடவடிக்கைகளுக்கான சட்டங்களும் பல்வேறு தேவைகளுக்குமான சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
ஆயினும் இந்தச் சட்டங்கள் குறித்த விபரங்களைப் பொது மக்கள் அறிந்திருப்பதில்லை. இதனால் பல சட்டங்கள் இருந்தும், அவற்றால் பொதுமக்களுக்குப் பயன் ஏற்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டங்களில் வழி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டங்கள் பற்றிய விபரங்களை அறியாமல் தெளிவற்றிருப்பதனால், பொதுமக்கள் நன்மையடைவதில்லை. சில வேளைகளில் அவர்கள் பாதிப்படைகின்றார்கள்.தகவல் அறியும் சட்டம் என்பது மிக முக்கியமான சட்டமாகும். இது முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்மை கருதி, அவர்கள் பயனடைவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாகும்.தகவல்களை அறிந்து கொள்கின்ற உரிமை இந்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படும்போது, அதிகாரிகள் அரச திணைக்களங்கள் சிலவேளைகளில் சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகலாம்.
dsc08909
ஆனால், இதனால் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாகவும் பெரிதும் பயனடைகின்றார்கள். அதுமட்டுமன்றி, அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், ஊழல்கள் மோசடிகளைத் தடுப்பதற்கும், இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழி வகுத்திருக்கின்றது.
பல வருடங்களின் பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வழிகோலியிருக்கின்றது. இந்தச் சட்டம் முதன் முதலில் கொண்டுவரப்பட்ட 1996 ஆம் ஆண்டே சட்டமாக்கப்பட்டிருந்தால் அசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே முதன் முதலாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்ற பெருமையை நாங்கள் பெற்றிருப்போம்.
காலம் தாழ்த்தி இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதனால், ஆசிய பிராந்தியத்தில் இறுதியாகக் கொண்டு வரப்பட்ட நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. பல வழிகளிலும் மிகவும் பயனுள்ள இந்தச் சட்டம் சரியான முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தபபட வேண்டும். அதற்கான விதிமுறைகள் செயல் முறைகள் என்பவன வகுக்கப்பட வேண்டும். அதேநேரம் இந்தச் சட்டத்தைப் பற்றி, பொதுமக்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தமக்குத் தேவையான – தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வர வேண்டும்.
இதன் ஊடாகத்தான் இந்தச் சட்டத்தின் முழுமையான பலனை அசாங்கமும் அதேநேரம் பொதுமக்களும் அடையக் கூடியதாக இருக்கும் என்றார் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி..இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் கேள்வி நேரத்தின்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செயற்பாடுகள் குறித்த சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
அத்துடன், தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்து பின்னர் தாயகம் திரும்பியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தில் எழுந்துள்ள காணி உரிமைப் பிரச்சினை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு, இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பி லான தகவல்களை அறியும் உரிமை தொடர்பிலான நிலைப்பாடு, இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டும் வேறு பல வழிகளில் பாதிக்கப்பட்டுமுள்ளவர்கள் பற்றிய புள்ளிவிபரத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு என்பது போன்ற பல விடயங்கள் குறித்து ந்த நிகழ்வில் கலந்து கொண்ருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
dsc08926
இவற்றுக்கு சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி மற்றும் போர் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் இணைப்பாளர் மொகமட் அசாத் ஆகியோர் விளக்கமளித்தனர். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.பிர்யதர்ஷன, ஊடகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் லங்காபேலி, போர் மற்றும் சமாதானம் பற்றிய அறிக்கையிடும் அமைப்பின் ஆசிய பிராந்திய இணைப்பாளர் அலன், அந்த அமைப்பின் திட்ட இணைப்பாளர் மொகமட் அசாட், ஓஹான் நிறுவனத்தின் இணைப்பாளர் திவாகர் உள்ளிட்டவர்களும் உரையாற்றினர்.
சட்டத்தரணி லியனாராச்சி சிங்களத்தில் ஆற்றிய விளக்க உரையும், போர் மற்றும் சமாதானம் தொடர்பிலான அறிக்கையிடும் அமைப்பின் ஆசிய பிராந்திய இணைப்பாளர் அலனின் ஆங்கில உரையும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் மொழிபெயர்ப்பாளர் எம்.பி.எம்.முஸ்தபாவினால் சிறப்பாக தமிழில் உரை பெயர்ப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap