குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைகளில் ஜுரிகளை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 27ம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்திய திலக்க இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கொலைச் சந்தேகநபர்கள் ஆறு பேரில் மூன்று பேர் ஜூரிகள் சபையின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் ஊடாக கடந்த செப்டம்பர் மாதம் கோரியிருந்தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் மூன்று பேர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய மூன்று பேரும் கருணா தரப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தேக நபர்களில் மூன்று பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் ஜூரி சபையொன்றை நியமிக்குமாறு கோர முடியும் எனவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜுரி சபையை கோர முடியாது என்பது குறிப்பிடத்க்கது.
Add Comment