இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

முழுப்பூசனிக்காயை சேற்றில் மறைக்கலாமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி

maithiri-jaffna-boy

கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? எண்டு சொல்லுவினம். பிறகென்ன? இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான் எண்டுற மாதிரித்தானே கதைக்கினம். பொடியள் ஆயுதம் தூக்க நாங்கள்தான் காரணம்! நாங்கள் காரணம்!! எண்டு சொல்லிச்சினம். யாழ்ப்பாணத்திலை வாழுற முகாம் மக்களின்டை துயரத்தை அங்கை போய் பாக்கச் சொல்லிச் சொன்னார் ஜனாதிபதி மைத்திரி.
ஆனால் ஜனாதிபியின்டை பேஸ்புக்கிலை ஒரு கதை விட்டிருக்கினம். அதாவது புலியளின்டை பயங்கரவாத நடவடிக்கையாலைதான் வலி மக்கள் அகதி ஆனவையளாம். ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு எண்டுற மாதிரி இதை சிங்களச் சனமும் நம்பப்போகுது. சிங்களத்திலையும் தமிழிலையும் இப்பிடி எழுதிப்போட்டு ஆங்கிலத்திலை வேற மாதிரி எழுதிக் கிடக்குது.
அறிய அறியக் கெடுவார் உண்டா? எண்டுதான் கேக்கவேணும். தமிழ் மக்களின்டை உரிமையை குடுக்காட்டி அவையள் திரும்ப தமிழீழம் கேட்டு ஆயுதம் தூக்குவினம் எண்டு சொல்லிப் போட்டு இப்ப திரும்பவும் பழைய இடத்துக்கு வாரதை எண்னெண்டு சொல்லுறது? ஈக்கு விடம் தலையிலை தேளுக்கு விடம் கொடுக்கிலை எண்டுற மாதிரியே இப்ப உள்ளவையளும் கடந்த கால ஆட்சியாளர்கள் போல நடக்கக்கூடாது கண்டியளே.
மைத்திரிபால சிறிசேனவின்டை நிகழ்ச்சியிலை பேசிய மாவை சேனாதிராஜா எம்.பி தமிழ் மக்களின்டை போராட்டத்தை பயங்கரவாதம் எண்டு சொல்லாதேங்கோ எண்டு கேட்டு சில மணித்தியாலங்களிலை ஜனாதிபயின்டை பேஸ்புக்கிலை கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு எண்டுற மாதிரி இப்பிடி எழுதிக் கிடக்குது. ஒருவேளை இது உருட்டும் புரட்டும் எண்டால் ஒடுக்கும் சிறப்பை எண்டதை மறவாதிங்கோ.
வலி வடக்கு மக்கள் இலங்கை இராணுவத்தின்டை ஆக்கிரமிப்பு போராலை இடம்பெயர்ந்தவை. அது மட்டுமே கால்வாசி நூற்றாண்டுக்கும் மேலை அகதியளாய் இருந்து சொந்த மண்ணைப் பிரிஞ்சு அலைஞ்சு,  அழிஞ்சு போனவை. எங்கடை நிலத்தை தாங்கோ எண்டு உந்த அரசாங்கத்தை நோக்கி எத்தினை வருசமாய் கத்திக் குளறிப் போராடுதுகள்.
இப்ப எல்.ரி.ரியினரின் பயங்கரவாத நடவடிக்கையாலை அந்தச் சனங்கள் அகதி ஆனதுகளாம். இப்பிடி சிங்கள மத்தியிலை பிரச்சாரம் செய்யிறதுதான் நல்லிணக்கமே? வலிவடக்கு ஆக்கிரமிப்பு வரலாற்றையே இது மறைக்கிற செயல். நொந்து போன அந்தச் சனங்களை இன்னும் நோகடிக்கிற செயல்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி எண்டுற மாதிரியே இலங்கை அரசு நடக்குது. மானைக் காட்டி மானைப் பிடிப்பினமாம். உங்கடை தலைவர்களின்டை ஆதரவையையும் பெற்றுக் கொண்டு எங்களுக்கு எதிராய் எங்கடை போராட்டத்திற்கு எதிராய், எங்கடை போராளியளுக்கு எதிராய் உண்மைக்கு மாறாய் இப்படிச் செய்யிறது பெரிய அநியாயம் பாருங்கோ.
இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும் எண்டுற மாதிரி இந்த நாட்டிலை உள்ள உண்மையான பிரச்சினையை பேசாமல் தங்கடை அரசியல் இருப்புக்காகவும் இனதவாதத்தை பாதுகாக்கிறதுக்கும் முயன்றால் இன்னும் நிறையப் பொய்யளை சொல்லலாம். புனைகதைகளை எழுதலாம். ஆனால் தமிழ் மக்கள் நல்ல தெளிவாய்தான் இருக்கினம். எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம் எண்டுறதை உவையள் மறக்காமல் இருந்தால் சரி.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.