இலங்கை பிரதான செய்திகள்

எட்டாவது வரவு செலவு திட்ட உரை வாசிக்கப்பட்டது – பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

ravi-slp-01

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

வரவு செலவு திட்ட உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்ததார்.
இன்றைய வரவு செலவு திட்ட உரை மாலை வரை இடம்பெற்றதுடன், மீண்டும் பாராளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் எனவும் சபநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

நிதியமைச்சாின் வரவுசெலவுத்திட்ட உரை

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்த  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இது வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவித்தார். மேலும்  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக காணப்படும் வேறுபாடானது  2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.  பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல் எரிவாயு 25 ரூபாவாலும், மண்ணென்ணெய் லீற்றருக்கு 5 ரூபாவாலும், நெத்தலி கருவாடு 5 ரூபாவாலும் உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ள இதேவேளை உள்நாட்டு டின் மீன் 425 கிராம் 125 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் உள்நாட்டு பால்மா 400 கிராம் 250 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  15 ஆண்டுகளுக்கு மேலாக அரச குடியிருப்புகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பிராந்திய செய்தியாளர்களுக்கு 100 சதவீத வட்டியற்ற 3 லட்சம் ரூபா கடனை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனவும்  மேலும் 28,000 ஆசிரியர்களுக்கு ரப் (tab) வழங்குவதாகவும், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும்  தெரிவித்த நிதியமைச்சர் தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் கல்வி வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மானிப்பதற்க்கான 21,000 மில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் கூறினார்.

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 100க்கு 50 வீத கடன் வட்டி நிவாரணம் வழங்கப்படும் எனவும் இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவசாய பொருட்களின் இறக்குமதிக்காக சேர்க்கப்பட்டுள்ள சில வரிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் உணவு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும்  விவசாயத்துறை சார்ந்த செலவினங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம், காணிகளை விடுவித்தல், பிரதான உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும்; விவசாய கூட்டுறவு அமைப்பின் ஊடாக 75 சதவீத வட்டி சலுகை வழங்கும் நோக்கில் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link