இலங்கை பிரதான செய்திகள்

மாவீரர் நினைவு நாளை அனுஸ்டிப்பதனை தடுத்தால் நல்லாட்சியின் முகத்திரை கிழியும் – சிவாஜிலிங்கம்

sivaji-lingam
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாளை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம். அந்நேரத்தில் மாவீரர் குடும்பத்தவர்கள் , மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்படும். எமது உரிமைக்காக போராடி மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை எமக்கு உண்டு.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தாருங்கள் என நாம் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கொல்லப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை சிங்கள மக்களுக்கு உண்டு எனில் , எமது உரிமைக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு.

நல்லாட்சியின் முகத்திரை கிழியும்.

எமது விடுதலை போராட்டத்தின் தியாகங்கள் அர்ப்பணிப்புக்களால் தான் எமது பிரச்சனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. எனவே எமது உரிமைக்காக போராடி மடிந்தவர்களின் நினைவு நாளினை ஆத்மாத்த ரீதியாக அனுஸ்டிப்போம்.

நினைவு தினத்திற்கு கடந்த கால அரசாங்கம் போன்று தடையை ஏற்படுத்தியோ, நினைவு நாளை அனுஸ்டிப்பதனை தடுத்தால் நல்லாட்சியின் முகத்திரை கிழியும்.

துயிலும் இல்லத்தில் அனுஸ்டிக்க தயார்.

மாவீரர் நாளினை மாவீரர் துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க நாம் தயார். அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வர வேண்டும்.  ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும்.

துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கோரிக்கைகளை முன் வைக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை முன் வைக்கவில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் போது நிபந்தனைகளை விதித்து ஆதரவு வழங்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு செய்வதில்லை. தற்போது கூட பட்ஜெட்க்கு ஆதரவு வழங்கும் போது மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.  அதற்கு அரசாங்கத்தின் மீதான அவ நம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் மாவீரர் நாளை ஆடம்பரமாக அனுஸ்டிக்க வேண்டாம்.

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் பெருமெடுப்பில் அனுஸ்டிக்க படுகின்றது. அதற்காக ஒரு இலட்சம், ஐம்பதாயிரம் பவுண்ஸ் என  பெருமளவில் செலவு செய்கின்றார்கள்.

இவ்வாறு ஆடம்பரமாக மாவீரர் தினத்தை அனுஸ்டிக்காமல் அதற்காக செலவு செய்யும் பணத்தை இங்கு தாயகத்தில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முன் வரவேண்டும்.

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை கையகப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை பலர் கொள்ளையடித்து உள்ளனர். அவர்கள் தாயகத்தில் உள்ளவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

அங்குள்ளவர்களுக்கு சிறு துளி, இங்குள்ளவர்களுக்கு பெருவெள்ளம் எனவே புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் ஆடம்பரங்களை குறைத்து இங்குள்ள தாயக உறவுகளுக்கு உதவ முன்வாருங்கள்.

இதுவரை காலமும் நீங்கள் செய்த உதவிகள் யானை பசிக்கு சோளன் பொறி போன்றதே என  சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers