இலங்கை

புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை தூக்கி சாப்பிட்டு விடும் அமைச்சர் மனோ கணேசன் :-


பிரதேச, நகர, மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடும். ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விட்டு இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிகாட்டி விடும். இதை நாம் ஒருபோதும் இப்படியே ஏற்றுக்கொள்ள போவதில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்த பொது நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடீபி ஆகிய கட்சிகளும் இருக்கின்றன. இது பாராளுமன்றத்தில் 19 எம்பீக்களை கொண்ட அணியாகும். இது தவிர 16 எம்பீக்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் நமது நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது. 5 எம்பீக்களை கொண்ட ஜேவிபியும் முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்புமுறைமையை நிராகரித்து உள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை தொடர்பில் கருத்து கூறியுள்ள அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று நாடு முழுக்க ஒட்டு மொத்தமாக அனைத்து பிரதேச, நகர, மாநகர சபைகளில் சுமார் 6,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த புதிய முறையின் கீழ் இந்த தொகை சுமார் 11,000 மாக உயரப்போகிறது. உயரும் பெருந்தொகை புதிய உறுப்பினர்களுக்கான செலவு என்ற வகைளில் பெருந்தொகை செலவு ஏற்படும். அத்துடன் கூடிய உறுப்பினர்களை அமர செய்ய அநேக சபை கட்டிடங்களை உடைத்து புதிதாக கட்ட வேண்டும். இல்லாவிட்டால், சில பள்ளிக்கூடங்களில் செய்வது போல் காலையில் ஒரு தொகை உறுப்பினர்களுக்கு சபை கூட்டமும், மாலையில் இன்னொரு தொகை உறுப்பினர்களுக்கு சபை கூட்டமும் நடத்த வேண்டும். அல்லது, ஒரு உறுப்பினர் மடியில் இன்னொரு உறுப்பினர் அமர வேண்டும்.

குறிப்பாக கொழும்பு மாநகரசபையில் இன்றுள்ள சுமார் 53 உறுப்பினர் தொகை சுமார் 100ஐ அண்மிக்கும். ஆகவே கொழும்பு மாநகர மண்டபத்தை உடைத்து செய்வதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு உறுப்பினர் மடியில் இன்னொரு உறுப்பினரை அமர சொல்லுவதா என்ற கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பிரச்சனை ஒட்டுமொத்த தொகை உயரும்போது, அதற்கு ஏற்றால்போல் இப்போது இருக்கும் சிறுபான்மை இன உறுப்பினர்களின் தொகையும் உயரத்தானே வேண்டும். ஆனால், புதிய முறையின் கீழ் உயராவிட்டாலும் பரவாயில்லை. அது குறையப்போகிறது என்ற ஆபத்து காத்திருக்கின்றது. இந்த சட்டத்தில் 70 விகிதம் வட்டார முறையும், 30 விகிதம் விகிதாசார முறையும் கலந்து கலப்பு முறையாக இருக்கின்றன. கடந்த பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் வாக்களிப்பின் மூலம் ஏற்கப்பட்ட போது அப்போதைய உள்ளூராட்சி துறை அமைச்சர், இந்த சட்டம் அமுல் செய்யப்படும் போது, 70 விகிதம் வட்டாரத்தை 60 விகிதமாக குறைப்பதாகவும், 30 விகிதம் விகிதாசார முறையை 40 விகிதமாக உயர்த்துவதாகவும் வாக்களித்து இருந்தார். அதை நம்பியே சிறுபான்மை கட்சிகள் தமது ஆதரவை வழங்கி இருந்தன.

இன்று பிரேரிக்கப்பட்டுள்ள, புதிய எல்லை மீள் நிர்ணய முறையின் கீழ் 70 விகிதம் வட்டார முறைமை 77 ஆக கூடியும், 30 விகிதம் விகிதாசார முறைமை 23 ஆக குறைந்தும் உள்ளன. சிறுபான்மையினருக்கு சாதகமான விகிதாசார முறைமை திட்டமிட்டு மீண்டும், மீண்டும் குறைக்கப்படுகிறது. இதை எப்படி ஏற்பது? பெரும்பான்மை கட்சிகளுக்கு சாமரம் வீசி ஏதோ அவர்கள் போட்டு தருவதை சத்தமில்லாமல் வாங்கி சென்று எடுபிடி வேலை செய்யும் நபர்களுக்கு இந்த முறைமை ஒருவேளை சரியாக அமையலாம். ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு ஒருபோதும் சரியாக அமையாது.

இந்த நாட்டில் 50 விகித தமிழர்களும், 65 விகித முஸ்லிம்களும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள். இதன்மூலம் சுமார் 58 விகித சிறுபான்மையினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சிதறி வாழ்கிறார்கள். இது புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த புதிய முறைமை பெரும் பாதிப்பை ஏற்படுத்த விட்டாலும் கூட, எமது பொது நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கி இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். ஏனைய சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பிரதமரை சந்தித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டத்தில், கூட்டமைப்பின் பிரதிநிதியாக எம். ஏ. சுமந்திரன் எம்பியும் கலந்துக்கொண்டார்.

மூன்றாவதாக, இந்த சட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் திருத்தம் தேவைப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். இப்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து, மாற்றலாம் என மாகாணசபை, உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா சொல்வது பிழையானது ஆகும். சட்ட திருத்தத்தின் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமே தவிர அடிப்படை பிரச்சினைகளான, ஒட்டு மொத்த உறுப்பினர் தொகை, 70 விகிதம் வட்டார முறைமை, 30 விகிதம் விகிதாசார முறைமை ஆகியவற்றை மாற்றும் சாத்தியம் இல்லை.

இந்நிலையில் நாம் ஏற்கனவே இருந்த பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என கோருகிறோம். எவரும் எம்மை பார்த்து தேர்தலை பிற்போட முயலுகிறோம் என குறை கூற முடியாது. நாம் தேர்தலை நடத்தவே கூறுகிறோம். அதை நியாயமான முறையில் நடத்த கூறுகிறோம். தேர்தல் நடத்துவதால் மாத்திரம், ஜனநாயகம் பாதுகாக்கப்படாது. நடத்தப்படும் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட்டாலேயே அது உண்மையாக ஜனநாயகம் பாதுகாக்கபடுவது ஆகும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.