இலங்கை பிரதான செய்திகள்

யாழ் கொம்படி விமான ஏவுகணை தாக்குதல் வழக்கில் எதிரி விடுதலை – யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிகாரி ஒருவர் உட்பட 4 விமனாப்படையினரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரியை செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்றது. விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் டிரோன் டெஸ்மன் சுதந்த சிவப்புள்ளே, விமானி அந்துநெத்தி சிந்தக்க பிரச்சன்ன டிசொய்சா, விமான சார்ஜன் மற்றும் விமானப்படை  கோப்பரல் வெத்தகலகே டொன் அஜித் துஷார ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13 ஆம் திகதி இந்தச் சம்பவம் தொடர்பாக சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சந்தேக நபர் கொம்படி பகுதியில் நடத்தப்பட்ட விமான ஏவுகணை தாக்குதலில் விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் உட்பட அந்த நான்கு விமானப்படையினருக்கும் மரணத்தை விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயேச்சையாக சுதந்திரமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படவில்லை என 17.01.2017 ஆம் திகதி கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா இல்iயா என்பதை மன்றுக்குத் தெரிவிக்குமாறு அரச சட்டவாதிக்கு பணிப்புரை விடுத்திருந்தது.

இந்;த நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்  வழக்கில் மேலதிக விசாரணை எதுவும் செய்யவில்லை எனவும் வழக்கத் தொடுனர் தரப்பு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி மன்றிறல் தெரிவித்தார்.

இதனையடுத்து எதிரியை விடுதலை செய்த நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
இந்த வழக்கின் எதிரி, 2011 ஜுன் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பச் சட்டத்தின் கீழ் தடுப்பக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என மன்றில் சாட்சியம் முன்வைக்கப்படடுள்ளது. ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு எதுவும் சான்றாக சமர்ப்பிக்கப்படவில்லை. தடுப்புக்காவல் உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது என்பதும் மன்றில் ஸ்தாபிக்கப்படவில்லை. எனவே எதிரி, சட்டரீதியான தடுப்புக்காவலில் இருந்தாரா அல்லது சட்ட முரணான தடுப்புக்காவலில் இருந்தாரா என்பதும் மன்றில் முன்வைக்கப்படவில்லை.

எனவே, மேற்படி காரணங்களின் அடிப்படையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஏற்கனவே மன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எண்பிக்க வேண்டியது வழக்கத் தொடுநரின் கடமையாகும்.
ஆனால் இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிரிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படாத படியால் எதிரியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கின்றது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.